முன்பு ஒரு திரைப்படத்தை சில லட்சங்களில் எடுத்து விடுவார்கள். ஆனால் இன்று குறைந்தபட்சம் சில கோடிகள் இருந்தால்தான் ஒரு சினிமா எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. சினிமாவுக்கான செலவில் கணிசமான பகுதி நடிகர், நடிகையர்களுக்கான சம்பளமாக சென்று விடும்.
அதுவும் பிரபலமான நடிகர், நடிகைகள் நடித்தார்கள் என்றால் பட்ஜெட் எகிறி விடும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் குழந்தை நடிகர்களுக்கு ஒரு காலத்தில் சில நூறு ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அது மலையேறி விட்டது. இப்போதெல்லாம் சில குழந்தை நட்சத்திரங்கள் ஒரு படத்துக்கு பல லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். இது போக விளம்பரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதனால் அவர்கள் சிறு வயதிலேயே அதிக செல்வத்தை சேர்த்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு குழந்தை நட்சத்திரத்தை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ள போகிறீர்கள். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குழந்தை நட்சத்திரம், ரூ.8 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார்.
உரி மற்றும் சத்ரிவாலி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் ரிவா அரோராதான் நாட்டின் பணக்கார குழந்தை நடிகையாக உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8.2 கோடியாகும். இது அவரை மற்ற குழந்தை நடிகர்களையும் விட முன்னிலைப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு வரை இந்தியாவின் பணக்கார குழந்தை நட்சத்திரமாக சாரா அர்ஜூன் இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்த ஆண்டு அவர் 18 வயதை எட்டியதால் அவர் இனி குழந்தை நட்சத்திரம் இல்லை.
இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் பணக்கார குழந்தை நட்சத்திரம் என்ற பெருமையை ரிவா அரோரா பெற்றார். இவர் அண்மையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொகுசு ஆடி காரை வாங்கினார். பிரபலம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. குழந்தை நட்சத்திரமான ரிவா அரோராவும் அதற்கு தப்பவில்லை. இப்போது அவரது வயது குறித்துதான் சர்ச்சை நிலவுகிறது.
ரிவா அரோராவின் குடும்பத்தினர் அவர் 2006ல் பிறந்தவர் அவருக்கு 16 வயது என்று சொல்கின்றனர். ஆனால் சிலர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரிவா அரோரா அளித்த பேட்டியில் தனக்கு 9 வயதுதான் ஆகிறது என்று கூறியதை குறிப்பிட்டு, அவர் 2010ல் பிறந்தவர் அவருக்கு 13 வயதுதான் ஆகிறது என்று அடித்து கூறுகின்றனர்.
வயது தொடர்பான சர்ச்சை குறித்து ரிவா அரோரா பேட்டி ஒன்றில், அதற்கு நான் என்ன சொல்வது?. என் வயதையோ அல்லது நான் என்ன செய்கிறேன் என்றோ சந்தேகப்படுபவர்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அன்பைக் கொடுப்பவர்களே எனக்கு போதும் என்று தெரிவித்து இருந்தார்.
2019ல் வெளியான உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் ரிவா அரோரா அறிமுகமானார். அந்த படத்தில் இறுதி சடங்கு காட்சியில் இவரது நடிப்பை அனைத்து ரசிகர்களும் பாராட்டினர்.
பின்னர் அவர் பாரத், செக்சன் 375, குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் போன்ற படங்களிலும், பண்டிஷ் பேண்டிட்ஸ் மற்றும் டிவிஎஃப் ட்ரிப்ளிங் போன்ற வெப் தொடர்களிலும் சிறிய கதாபாத்திரங்களை செய்தார். கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ரகுல் ப்ரீத் சிங் நடித்த சத்ரிவாலி படத்தில் துணை வேடத்தில் ரிவா நடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications