மும்பை: இந்தியாவின் பழமை வாய்ந்த தொழில் குழுமம் எது என்ற கேள்வியை கேட்டால் நாம் அனைவரும் உடனடியாக டாடா என்றுதான் பதில் கூறுவோம். இந்தியாவில் டாடா,
பிர்லா, கோயங்கா, அம்பானி குழுமம் ஆகியவை தற்போது புகழ் பெற்ற தொழில் சாம்ராஜ்ஜியங்களாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பழமையான தொழில் குழுமம் இவை கிடையாது. இந்தியாவின் பழமை வாய்ந்த தொழில் குழுமம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
அது தான் வாடியா குழுமம், மும்பையை தலைமை இடமாகக் கொண்டு கப்பல் துறையில் கால் பதித்த இந்தியாவின் முதல் தொழில் சாம்ராஜ்ஜியம் வாடியா. 1736 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த லவ்ஜி நசீர்வாஞ்சி வாடியா என்பவர் தான் வாடியா குழுமத்திற்கு அடித்தளமிட்டவர். இந்த நிறுவனம் கப்பல் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தது. முதன்முறையாக மும்பையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்திடம் இருந்து கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தங்களை பெற்றது.

லவ்ஜி வாடியா அவர்களால் தொடங்கப்பட்ட இந்த குழுமம் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான மற்றும் தற்போதும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு தொழில் குழுமமாகும். வாடியா குழும்பத்தை பொறுத்தவரை தற்போது அதன் சந்தை மூலதனம் 1, 20,000 கோடி ரூபாயாகும். வாடியா குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் நூறாண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனங்களாகும். பாம்பே டையிங், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்.
பாம்பே டையிங் நிறுவனம் 1879 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னுடைய உயர்தரமான துணிகளுக்கும் புதுமையான வடிவங்களுக்கும் பெயர் போனதுதான் பாம்பே டையிங் நிறுவனம். இன்றளவும் ஆடைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணம் என்றால் பாம்பே டையிங் என்று தான் கூறுவார்கள்.
1892 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். பிஸ்கட் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடங்கி பெரும்பாலான இந்தியர்கள் விரும்பி உண்ணக்கூடிய பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பர்மா தேக்குகளை வர்த்தகம் செய்யும் நிறுவனமாக இருந்தது. தற்போது வாடியா குழுமம் சுகாதாரம், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து விட்டது. இருந்தாலும் இதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது 18ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கப்பல் கட்டுமான நிறுவனம் தான். தற்போது என்னதான் இந்தியாவில் அம்பானி, அதானி ஆகிய தொழில் சாம்ராஜ்யங்கள் வளர்ந்து விட்டாலும் வாடியா குழுமம் தன்னுடைய பாரம்பரியத்தை இன்று வரை காப்பாற்றி இந்தியாவின் பழமையான தொழில் குடும்பம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications