தமிழக பாஜக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பாஜக எம்எல்ஏவும், பாஜக சட்டப்பேரவை குழு தலைவருமான நயினார் நாகேந்திரனை தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தனது விருப்பமனுவை நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,எல் முருகன், பொன் ராதா கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய தலைவர்கள் அவரது விருப்ப மனுவை முன்மொழிந்தனர். மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழக பாஜகவின் 10வது மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு வானகரம் தனியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.
அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில், அவரது அவரது பெயரை சொல்லி யாரும் கூப்பிட மாட்டார்கள் பண்ணையார் என்றுதான் அன்பாக அழைப்பார்கள். நயினார் நாகேந்திரன் குடும்பம் அவ்வளவு செல்வ செழிப்பான குடும்பமாகும். கடந்த ஆண்டு நெல்லை மக்களவை தொகுதியில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை தெரிவித்து இருந்தார்.
அதன்படி, நயினார் நாகேந்திரனுக்கு மொத்தம் ரூ.13.91 கோடி அசையும் (ரூ.12 கோடி) மற்றும் அசையா (ரூ.1.91 கோடி) சொத்துக்கள் உள்ளன.இது தவிர அவருக்கு ரூ.2.61 கோடி கடன் உள்ளது. அசையும் சொத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான 240 சவரன் நகையும், டிராக்டர், இன்னோவா உள்பட மொத்த 4 வாகனங்களும் அடங்கும். ரொக்கமாக மட்டும் ரூ.12.43 லட்சம் கையில் வைத்துள்ளார்.
நயினர் நாகேந்திரனின் மனைவி சந்திரா பெயரில் மொத்தம் ரூ.18.01 கோடி மதிப்பிலான அசையும் (ரூ.12.03) கோடி மற்றும் அசையா (ரூ.5.98 கோடி) சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பல்வேறு நிதி நிறுவனங்களில் மொத்தம் ரூ.2.50 கோடி கடன் உள்ளது. அசையும் சொத்தில் அவருக்கு சொந்தமான ரூ.2.68 கோடி மதிப்பிலான 560 சவரன் தங்க நகைகளும் அடங்கும். இவருக்கு சொந்தமாக கார் எதுவும் கிடையாது.
அரசியலில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது பாஜகவின் மாநில தலைவர் பதவிக்கு உயர்ந்திருப்பது அவரது உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசாகும். பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதன் மூலம் தென்தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications