புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்பவர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வருகை தருவர். ஆனால் அப்படி உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பணியில் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே ஏன் வேலையை விட்டு செல்கிறார்கள் தெரியுமா?.. இதை தான் தற்போது லின்கிடுஇன் தளத்தில் தீவிரமாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
இம்பேக்ட் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் (Impact Infotech Private limited ) நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக இருப்பவர் பாரதி பவார்.

இவர் தன்னுடைய லின்கிடுஇன் பக்கத்தில் ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குள் ஏன் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார் என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இது தான் தற்போது லிங்குடின் தளத்தில் ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாரதி பவார் "ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேரும்போது ஆறு மாதங்களுக்குள் அல்லது ஓர் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்வதில்லை. ஆனால் அவர்கள் அதற்கு தூண்டப்படுகிறார்கள்" என கூறியுள்ளார்.
அதாவது, ஊழியர்கள் குறுகிய காலத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில், மோசமான பணி கலாச்சாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக குறைந்த ஊதியம் இவ்வாறு ஊழியர்கள் பணி விலக காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பணி நேரத்தை தாண்டி ஒருவர் வேலை செய்யும் போது அதற்கு ஊதியமும், பரிசும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் இருக்கும். ஆனால் அவ்வாறு கிடைக்காத போது நிறுவனத்தின் மீது வெறுப்பு உண்டாகிறது என தெரிவித்துள்ளார். ஒருவருக்கு அவரது திறனை விட அளவுக்கு அதிகமான வேலைப்பளு மற்றும் அழுத்தம் தருவது மற்றொரு காரணமாக முன் வைக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் நிகழும் அரசியல், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி வெறுப்பை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தான், ஒரு நிறுவனத்தில் சேர்ந்த ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டுக்குள் நிறுவனத்தை பிடிக்காமல் வெளியேறுவதற்கான மிக முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
யாரும் அடிக்கடி வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கிடையாது, ஆனால் அலுவலகங்களில் இருக்கக்கூடிய சூழல்கள் தான் அவர்களை அத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கின்றன எனக் கூறியுள்ளார்.
பாரதி பவாரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாங்கள் பணியை கைவிட்டதற்கான காரணங்களையும் சிலர் விவரித்துள்ளனர். எனவே ஒரு ஊழியரை தக்க வைத்து கொள்ள சிறந்த பணி கலாச்சாரம், சரியான ஊதியம், பாராட்டுகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications