கிராஜுவிட்டி அதாவது பணிக்கொடை என்பது ஒரு பணியாளரால் அவர் ஒரு நிறுவனத்துக்கு செய்த சேவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தரப்படக்கூடிய தொகை. ஒரு நிறுவனத்தில் அந்த ஊழியர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தன்னுடைய வேலையை நிறைவு செய்திருந்தால் அந்த நிறுவனம், ஊழியர் பணியிலிருந்து செல்லும்போது பணிக்கொடையை வழங்க வேண்டும்.
பணிக்கொடை தொகை என்பது அந்த ஊழியர் நிறுவனத்தில் வேலை செய்த காலம் மற்றும் இறுதியாக அவர் வாங்கிய ஊதியம் ஆகியவற்றை பொறுத்து கணக்கிடப்படுகிறது. இங்கே ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் கூட ஒரு வருடமாக கருதப்படும்.

அதாவது நீங்கள் ஆறு வருடங்கள் 7 மாதங்கள் வேலை செய்திருந்தால் ,அது ஏழு வருடங்களாக தான் கணக்கில் கொள்ளப்படும். 1972 பணிக்கொடை சட்டத்தின் கீழ் குறைந்தது 10 ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் முதல் பணிக்கொடை வழங்க வேண்டும்.
ஒரு வேளை நிறுவனங்கள் உரிய பணிக்கொடையை வழங்க மறுத்தால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும். பொதுவாக ஒரு நிறுவனம், பணிக்கொடை பெற தகுதியுள்ள ஊழியர், வேலையை விட்டுச் சென்று 30 நாட்களுக்குள் பணிக்கொடையை வழங்கிட வேண்டும் என்கிறது அரசு. பணிக்கொடை பெறுவதற்கான தகுதிகள் இருந்தும் நிறுவனம் அதை செலுத்த மறுத்தால் அந்த நிறுவனத்திற்கு சட்டரீதியான நோட்டீஸ் ஒன்றை அனுப்ப வழி உள்ளது.
வேலையை விட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த நோட்டீசுக்கு பதிலோ அல்லது உரிய பணிக்கொடையையோ அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இன்றி மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திலும் நீங்கள் புகார் செய்ய முடியும்.
இந்த புகார் அளிக்கப்பட்டு , சம்பந்தப்பட்ட அதிகாரி பணிக்கொடை வழங்க ஆணையிட்டால் அதனை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் கிராஜுவிட்டி பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பெற்ற 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய தொகை மற்றும் பணம் செலுத்தும் தேதியை அந்த நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.
ஊழியரின் பணிக்கொடை கோரலை நிராகரித்தால் அந்த நிறுவனம் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். காரணம் பொருத்தமானதாக இல்லை மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது உள்ளிட்ட செயல்களின் போது தொழிலாளர் நலத்துறை அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்க முடியும்.
மேலும் பணக்கொடை வழங்க தவறிய காலத்திற்கான வட்டியையும் கணக்கிட்டு செலுத்த வேண்டிய நிபந்தனையும் இருக்கிறது. எனவே உங்களது நிறுவனம் பணிக்கொடை வழங்க மறுத்தால் நீங்கள் தைரியமாக தொழிலாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளிக்கலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications