பெங்களூரு: பங்கு சந்தையில் முதலீடு செய்து செய்து.. ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே மாறிப்போன நபர் ஒருவர் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனையடுத்து அவர் தற்போது மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பேசு பொருளாகியுள்ளது.
பங்கு சந்தை என்பது ஒரு முன்னறிவிக்கப்படாத புயல் போன்றது என்று பலர் சொல்வதுண்டு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திசை மாறும் புயலை போல பங்கு சந்தையின் போக்கும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். இங்கு ஒரேயொரு விதி மட்டும்தான். பணம் படைத்தவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். மற்றவர்கள் தங்களின் வாழ்க்கையையே அடமானம் வைத்து சிக்கிக்கொள்வார்கள். பங்கு சந்தை எவ்வளவு உயரத்திற்கு உங்களை அழைத்து செல்கிறதோ அவ்வளவு ரிஸ்க் அதிகம்.

ஏனெனில் கீழிருந்து விழுவதை விட உயரத்திலிருந்து விழுவதுதானே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பங்கு சந்தை குறித்தும், பங்குகள் குறித்தும் முழுமையான புரிதல் வேண்டும். ஆனாலும் கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பங்கு சந்தையில் என்னதான் 'எருமை' மூர்க்கமாக இருந்தாலும் பசியின் கோரத்தில் இருக்கும் 'கரடியிடமிருந்து' அதனால் தப்பிக்க முடியாது.
இப்படிதான் கர்நாடகாவை சேர்ந்தை நபர் ஒருவர் பங்கு சந்தையில் அநியாயத்திற்கு முதலீடு செய்து கடைசியில் கரடியின் பசிக்கு இரையாகிவிட்டார். அதாவது ரூ.30 லட்சத்தை பங்கு சந்தையில் இழந்திருக்கிறார். முதலில் தனது சம்பள பணத்தை கொண்டு முதலீடு செய்திருக்கிறார். அதில் இரட்டிப்பு லாபம் கிடைத்திருக்கிறது. எனவே தனது சேமிப்பு பணத்திலிருந்து முதலீடு செய்திருக்கிறார். அதுவும் இரட்டிப்பாக கிடைத்திருக்கிறது. இந்த முறை தனது எதிர்கால வாழ்க்கைக்காக வைத்திருந்த பணத்தையும் சேர்ந்து முதலீடு செய்திருக்கிறார். இதில் மொத்தமும் 'ஸ்வாக' ஆகியுள்ளது. இது அவருக்கு ஏற்பட்ட பேரிடி. இதிலேயே அவர் உஷாராகி இருக்கலாம்.
ஆனால் வீட்டில் உறவினர்களிடம் கடன் வாங்கி முதலீடு செய்து இழந்த பணத்தை மீட்க முயன்றிருக்கிறார். முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் உறவினர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே கடன் வாங்கி முதலீடு செய்திருக்கிறார். அதுவும் மொத்தமாக வழித்துக்கொண்டு சென்றுவிட்டது. பின்னர் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அவர்களுடைய பணமும் 'காற்றில் கரைந்த கற்பூரம்' போல போய்விட்டது. இறுதியாக ஒரு முற்சி செய்திருக்கிறார். அதாவது கிடைக்கும் பணத்தை உடனே முதலீடு செய்யாமல் மொத்தமாக சேர்ந்து முதலீடு செய்து அதை அப்படியே இரடிப்பாக பெறுவது.

அந்த வகையில் கடைசி முயற்சியாக உறவினர்கள், நண்பர்கள், வங்கி கடன் என மூன்று பக்கங்களிலும் இருந்து ஒரு பெரிய தொகை திரட்டியுள்ளார். அதனை வெவ்வேறு பங்குகளில் முதலீடும் செய்திருக்கிறார். ஆனால் இவருடைய கடைசி முயற்சியும் வீணாகிவிட்டது. எல்லாமும் போன பின்னர் குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். தற்போது இவர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (NIMHANS) சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவரும், உளவியல் பேராசிரியருமான டாக்டர் மனோஜ் குமார் சர்மா கூறுகையில், "இது போன்ற ஒரு பிரச்னையை சந்திப்பது நாங்கள் இதுவே முதல்முறை.
இதற்கு முன்னர் நாங்கள் சந்தித்த பிரச்னைகள் வேறு. பொதுவாக வீடியோ கேம் விளையாடுவதில் அடிமையானவர்கள், அல்லது சூதாட்டத்தில் அடிமையானவர்களுக்குதான்தான் நாங்கள் சிகிச்சை அளித்திருக்கிறோம். ஆனால் பங்கு சந்தையில் அடிமையானவர்கள் குறித்து நாங்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது. எப்படி இருப்பினும் தற்போது அவர் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறார். இதுவரை இரண்டு அமர்வுகளை கடந்திருக்கிறார். நாங்கள் அவருக்கு எந்த மாத்திரையையும் கொடுக்கவில்லை. மாறாக பங்கு சந்தை குறித்த புரிதலைதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications