ஒருவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து தன் இறப்புக்குப் பிறகு யாரைச் சென்றடைய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு உயில் எழுதி வைக்கலாம். ஆனால் உயில் ஆவணத்தில் கையெழுத்திடும்போது இறந்தவர் சுய நினைவில் இருந்தாரா? அல்லது யாருடைய வற்புறுத்தலின் பேரில் கையெழுத்துபோட்டாரா? என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற சூழலில் உயில் எழுதுபவர் கையெழுத்து போடும்போது அதை வீடியோவாக பதிவிட்டு வைப்பது நல்லது. அதுவும் இறந்தவருக்கு இரண்டு, மூன்று வாரிசுகள் இருந்தால் இது போன்ற வீடியோக்கள் பிற்காலத்தில் ஒரு சான்றாக அமையும்.
உயிலை வீடியோ எடுப்பது சட்டப்பூர்வ ஆவணமாக இருக்குமா?: உயில் எழுதுபவரையும் அந்த சூழலையும் வீடியோவாக எடுத்து வைப்பது பிற்காலத்தில் ஒரு சாட்சியாக அமையுமே தவிர சட்டப்பூர்வ ஆவணமாக இருக்காது. சட்டபூர்வ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முறையான உயில் தயாரிப்பு, சாட்சிகளின் கையொப்பம் ஆகியவை அவசியம். ஆனால் எந்த சூழலில் உயில் எழுதப்பட்டது என்பதை காண்பிக்க நீங்கள் வீடியோவை பயன்படுத்தலாம்.

எப்படி வீடியோ எடுக்க வேண்டும்?: வீடியோ எடுப்பது சாட்சியாக அமைய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். உயில் எழுதுபவரின் முகம் தெள்ளத்தெளிவாக தெரிய வேண்டும். அதேபோல அவர் எந்த ஆவணத்தில் கையெழுத்து போடுகிறார் என்பதும் தெளிவாக இருக்க வேண்டும். அதே வீடியோ பதிவில் தனது சொந்த விருப்பத்தில் தான் எழுதினாரா? என்பதை அவரே விளக்கினால் இன்னும் சிறப்பு.
உயில் தெளிவாக தெரிய வேண்டும்: கையெழுத்து போடும்போது உயில் ஆவணம் கேமராவில் தெளிவாக தெரிய வேண்டும். உயில் ஆவணமும், உயில் எழுதுபவர் கையெழுத்து போடும் ஆவணமும் ஒன்றாக இருக்கிறதா என்பதையும் காண்பிக்க வேண்டும். அதேபோல உயிலில் கையெழுத்து போடும் சாட்சிகள் அனைவரும் வீடியோவில் அடையாளம் காட்டப்பட வேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் உயிர் எழுதி வைப்பவர் யாருடைய தூண்டுதலின் பேரிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ எழுதவில்லை என்பதை சொல்லும் விதமாக அந்த வீடியோ இருக்க வேண்டும். அதேபோல யாருக்கு உயில் எழுதி வைக்கிறாரோ அந்த நபர் வீடியோவில் அளவுக்கு அதிகமாக தலையிடாமல் இருப்பது நல்லது.
வீடியோவில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: மொத்த செயல்முறையும் ஒரே வீடியோவாக எடுத்து வைப்பது அவசியம். இதில் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. உதாரணமாக பகுதி பகுதியாக வீடியோ எடுத்து அதை எடிட் செய்து காண்பிக்க கூடாது. ஒரே வீடியோவாக தொடர்ச்சியாக இருப்பதே நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பகுதி பகுதியாக வீடியோ எடுத்து அதை எடிட் செய்து மொத்த வீடியோவாக காண்பித்தால் இடைவெளி நேரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது போல சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடியோ செயற்கையாக இருக்கக் கூடாது. எனவே வீடியோவை அதன் தேதி, நேரம் மாறாமல் சேமித்து வைப்பது அவசியம். AI தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்து விட்டன. எனவே வீடியோ உயிலுக்கு எதிரான சட்டப் போராட்டங்களை எல்லாம் முழுமையாக தடுத்து விடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அசல் வீடியோவை பத்திரப்படுத்தி வைப்பது நல்லது. அதோடு சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் பாரம்பரிய ஆவணங்களையும் சரியாக பராமரிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications