தமிழ்நாட்டில் சென்னை அடுத்ததாக கோயம்புத்தூர் ,மதுரை உள்ளிட்ட நகரங்கள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் இங்கே முதலீடு செய்கின்றன ,பல்வேறு உற்பத்தி ஆலைகளும் நிறுவப்படுகின்றன . இதற்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் உருவாவதால் ஏராளமான மக்கள் கோவை , மதுரை உள்ளிட்ட நகரங்களில் குடிபெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப அங்கே போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு சென்னையை போலவே கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.

மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டுவரப்படும் போது உள்கட்டமைப்பு ரீதியாக அந்த நகரம் வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு மட்டுமில்லாமல் மக்கள் எளிமையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறுகிய நேரத்திலேயே சென்று வர முடியும் . இது மேற்கொண்டு பல முதலீடுகளையும் ஈர்க்கும். இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு கோவை , மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டு வரப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளையும் நிராகரித்து மத்திய அரசு திருப்பி அனுப்பி இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக 20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் அந்த நகரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை வழங்க முடியாது என காரணம் கூறி தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது என செய்தி வெளிவந்தது. ஆனால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த தகவலை மறுத்துள்ளது.
கோவை , மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் கூடுதல் விளக்கங்களை கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பி இருப்பதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த விளக்கங்களுடன் புதிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் தருகின்றனர். எனவே புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் மத்திய அரசு அவற்றை ஆய்வு செய்து மெட்ரோ ரயில் திட்டம் குறித்த முடிவினை அறிவிக்கும்.
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் 10,740 கோடி ரூபாயில் 34.8 கிலோமீட்டர் தொலைவிற்கும், மதுரையில் 11,300 கோடி ரூபாயில் 32 கிலோமீட்டர் தொலைவிற்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்தது. இதன் மூலம் தங்கள் நகரங்களும் நவீனமாகின்றன என கோவை மற்றும் மதுரை நகர மக்கள் கொண்டாடினர். தமிழ்நாடு அரசு இரு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் 50 சதவீத பங்களிப்போடு திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
பல மாதங்களாக இதற்கு ஒப்புதல் அளிக்காமலேயே நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசு தற்போது சில விளக்கங்களை கேட்டுள்ளது. எனவே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications