இந்தியாவில் MG Motor நிறுவனத்தின் கார்களுக்குக் கணிசமான ரசிகர் கூட்டம் இருந்தாலும், இந்நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு இருந்தது.
இந்த நிலையில் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு MG Motor நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யச் சீனாவின் SAIC மோட்டார் மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குரூப் கூட்டணி நிறுவனத்தை உருவாக்க லண்டனில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இக்கூட்டணி நிறுவனத்தில் JSW குரூப் சுமார் 35 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அக்டோபர் மாதம் JSW குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் MG மோட்டார் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றுவது குறித்த திட்டத்தை நிர்வாகத்திடம் வைக்கப்படவில்லை, எவ்விதமான ஆலோசனையும் நடக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்தில் கூட்டணி உறுதியானது.
JSW குரூப், MG மோட்டார் இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றுவது குறித்து ஜூன் மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், இந்த இடைப்பட்ட காலத்தில் MG மோட்டார் கார்களின் உற்பத்தியை அதிகரிக்கச் சஜ்ஜன் ஜிண்டால் சென்னையில் இருக்கும் போர்ட் தொழிற்சாலையைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தியது மறக்க முடியாது.
JSW குருப் இதுவரையில் ஸ்டீல், மின்சாரம், பெயிண்ட் தயாரிப்பு ஆகிய துறையில் மட்டுமே இருந்த நிலையில், எம்ஜி மோட்டார்ஸ்-ன் 35 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய காரணத்தால் ஆட்டோமொபைல் துறையில் இறங்கியுள்ளது.
சென்னையில் இருக்கும் மாபெரும் கார் மற்றும் இன்ஜின் தயாரிப்புக்கான ஃபோர்டு தொழிற்சாலை அதன் நிர்வாகம் நிதி மற்றும் வர்த்தக முடக்கம் காரணமாகப் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இத்தொழிற்சாலைக்குத் தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் ஆகஸ்ட் மாதம் JSW குரூப் சென்னை தொழிற்சாலையைக் கைப்பற்ற JSW குரூப் மற்றும் அமெரிக்காவின் ஃபோர்ட் உயர்மட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தை செய்துவருவதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்பு JSW குருப்-ன் எம்ஜி மோட்டார்ஸ் குறித்த மறுப்பு அறிக்கையைத் தொடர்ந்து ஃபோர்டு தொழிற்சாலை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் கிடப்பில் போனது
ஆனால் தற்போது வெற்றிகரமான MG Motor நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை JSW குரூப் கைப்பற்றிய நிலையில், இப்புதிய கூட்டணி மூலம் MG Motor நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் ஏஸ்டர் ஆகிய எஸ்யூவி கார்களின் உற்பத்தி, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க மீண்டும் சென்னை ஃபோர்ட் தொழிற்சாலை கைப்பற்றுவது குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. JSW குரூப் உடனே இதற்கான பணியைத் துவங்குமா என்பது உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், வாய்ப்புகள் அதிகம்.
சென்னை ஃபோர்ட் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, வருடத்திற்கு 200000 வாகனங்களையும், 3.4 லட்சம் இன்ஜின்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட கட்டமைப்பு. ஃபோர்ட் நிறுவனத்தின் வர்த்தகச் சரிவு காரணமாக ஜூலை 2022 முதல் சென்னை தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையைக் கைப்பற்றினால் MG Motor நிறுவனத்திற்கு ஜாக்பாட் தான்.


Click it and Unblock the Notifications