திருச்சி: சர்வதேச அளவில் புகழ்பெற்ற டால்பி லெபாரட்டரிஸ் நிறுவனம் இந்தியாவில் ஆறு இடங்களில் டால்பி சினிமா தியேட்டர்களை அமைக்க இருக்கிறது. இதில் ஒரு தியேட்டர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டால்பி லெபாரட்டரிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் டால்பி சினிமாக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் மக்களுக்கு மிகச்சிறந்த ஒரு சினிமா அனுபவத்தை தர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் என டால்பி லேப் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் ஆறு நகரங்களில் எங்களுடைய டால்பி சினிமாக்களை நிறுவ இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.

புனே, ஐதராபாத் , பெங்களூரு, கொச்சி, உல்லிகல் ஆகிய ஐந்து நகரங்களிலும் தமிழ்நாட்டில் திருச்சியிலும் டால்பி சினிமா நிறுவப்பட இருக்கிறது. திருச்சியில் இருக்கும் எல்ஏ சினிமா தியேட்டரில் டால்பி சினிமா அனுபவத்தை ரசிகர்கள் இனி பெற முடியும். டால்பி சினிமாவை பொறுத்தவரை தியேட்டருக்கு வந்து பெரிய திரையில் படம் பார்க்கும் மக்களுக்கு ஈடு இணையற்ற காட்சி அனுபவத்தை வழங்குவதற்கான நவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தை இயக்குபவர்கள் எப்படி அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதுபோன்ற ஈடு இணையற்ற ஒரு காட்சி அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைந்து டால்பி சினிமா செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் திரையில் நாம் காணும் காட்சிகள் மற்றும் படங்கள் நம் கண் முன்னே நேரடியாக அவை நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அது மட்டும் இன்றி ஒலியானது தியேட்டரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நம்மை வந்து சேரும். இந்த இரண்டு விஷயங்களும் இருப்பதால் நீங்கள் தியேட்டரில் அமர்ந்து சினிமாவை பார்க்கும் போது உங்களுக்கு நிஜமாக நடக்கும் சம்பவங்களை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும் என டால்பி சினிமா கூறுகிறது.
இந்திய மக்களின் வாழ்க்கையில் பொழுதுபோக்கு துறை, குறிப்பாக திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில் நாங்கள் டால்பின் சினிமாக்களை கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம் என இந்த நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் திரைப்படங்கள் மீது தீரா காதல் கொண்டவர்கள் அவர்களின் திரை அனுபவத்தை டால்பி சினிமா இன்னும் மேம்படுத்தும் எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தான் டால்பி சினிமா செயல்பட தொடங்கியது. சுமார் 14 நாடுகளில் தற்போது டால்பி சினிமா தன்னுடைய நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் படங்களை திரையிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications