சமீபகாலமாக டோமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. தொழில்முனைவோர் மற்றும் ஹப்ஸ்பாட் இணை நிறுவனருமான தர்மேஷ் ஷா chat.com என்ற டொமைனை வாங்கி தற்போது அதை OpenAI நிறுவனத்திடம் மறு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் தான் வாங்கிய விலையை விட அதிக விலைக்கு இந்த டொமைனை விற்றுள்ளார். இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.130 கோடிக்கு இந்த ஒப்பந்தம் முடிந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் chat.com இப்போது OpenAI நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான ChatGPT-க்கு பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹப்ஸ்பாட்டின் சிடிஓ-வாக இருந்த தர்மேஷ் ஷா 2023-ஆம் ஆண்டில் $15.5 மில்லியன் கொடுத்து chat.com டொமைனை வாங்கி இருக்கிறார்.. இந்நிலையில் இறுதி விற்பனைக்கான விலையை வெளியிடாமல் வைத்திருந்த தர்மேஷ் ஷா, தற்போது இதை OpenAI நிறுவனத்திற்கு ரூ.130 கோடிக்கு மறு விற்பனை செய்திருக்கிறார்.

தான் வாங்கியதை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும், நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேனை 10 வருடங்களுக்கு மேலாக தனக்கு தெரியும் என்றும், ChatGPT கண்டுபிடிப்பதற்கு முன்பிலிருந்து தாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வருவதாகவும், இதனால் லாபத்தை ஈடு செய்யும் வகையில் விற்பனை செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விற்பனையின் தொகையை நிறுவனத்தின் பங்குகள் மூலமாக வாங்கிக் கொள்ள இருப்பதாகவும் தர்மேஷ் ஷா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் எழுந்த சர்ச்சை: அதிகளவிலான OTT தளங்கள் உருவாகி வருவதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், ஜியோ சினிமாவும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த 2 தளங்களும் இணைந்தால் "Jiohotstar.com" என்ற பெயரில் டொமைன் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த டெவலப்பர் Jiohotstar.com என்ற டொமைனை வாங்கி வைத்திருந்தார். இந்த டொமைனை வாங்கினால் மட்டுமே ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இணைந்து ஒரு தளத்தை வெளியிட முடியும். எனவே இந்த டோமைனை விற்பனை செய்வதற்காக முடிவு செய்து அந்த டெவலப்பர் ரூ.1 கோடி விலை நிர்ணயம் செய்து அந்தத் தொகையை தான் படிப்பிற்காக செலவு செய்ய இருப்பதாக கூறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார்.
ஒரு நிறுவனத்தில் இணையதளத்திற்கு இருக்கும் டொமைன் பெயர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எக்ஸ்பைரி ஆகிவிடும். அப்படி எக்ஸ்பைரி ஆகும் முக்கிய நிறுவனங்களின் டொமைன் பெயரை யாராவது தக்க நேரத்தில் வாங்கி வைத்து விட்டால் அதன் பிறகு வாங்கி வைத்தவர் என்ன விலை சொல்கிறாரோ அதை கொடுத்து தான் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தும்.
இதற்கு முன்னர் இதே போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. ஒரு வேலை ஒரு நிறுவனத்தின் முக்கியமான டொமைன் பெயராக இருந்தால், அது தான் மக்களின் மனதில் இணையதள முகவரியாக பதிந்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் டொமைனை வாங்கி வைத்திருப்பவர் சொல்வது தான் இறுதி விலை அப்படி டொமைனை விற்று பணக்காரராக மாறிய பலர் நம் நாட்டில் இருக்கின்றனர்.
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ இந்த டெக்கி சொன்ன விலையை ஏற்க மறுத்து பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர போவதாக மிரட்டியது. இதற்கு பதிலளித்த அந்த டெவலப்பர் தான் எந்த விதி மீறலையும் செய்யவில்லை என்றும், பெரிய நிறுவனத்துடன் சண்டையிடும் அளவுக்கு வலிமை தன்னிடம் இல்லை என்றும் கூறி இருந்தார். மேலும் விரைவில் இந்த இணையதளம் செயலிழந்து போகும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்ப சமீபத்தில் Jiohotstar.com என்ற இணையதளம் 2 துபாய் குழந்தைகளின் இணையதளமாக மாறியது. ஜெயினம் மற்றும் ஜீவிகா என்ற இரண்டு குழந்தைகள் துபாயை சேர்ந்த உடன் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த டொமைனை ஜெயினம் மற்றும் ஜீவிகா ஆகியோருக்கு பதிலாக யார் வாங்கித் தந்தனர் என்ற விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. டெல்லி டெக்கி செய்தது சரியா? உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ஸில் தெரிவியுங்கள்.


Click it and Unblock the Notifications