அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் பெருமளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி இந்தியாவில் இருக்கும் டிரம்ப் டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் தான் டிரம்ப் டவர்ஸ். இந்த நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஆடம்பர குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலும் ஏற்கனவே மும்பை, புனே, குருகிராம் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் டிரம்ப் டவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் இன்னும் அதிக எண்ணிக்கையில் டிரம்ப் டவர்கள் நிறுவப்பட இருப்பது தெரியவந்துள்ளது. டிரிபேகா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான கல்பேஷ் மேத்தா டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவர். இவர் அண்மையில் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வுக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது டிரம்பின் மகன் எரிக் டிரம்பை சந்தித்ததாகவும் இந்தியாவில் டிரம்ப் டவர்ஸ் நிறுவன முதலீடு தொடர்பான அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் டிரம்பின் நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெருமளவில் முதலீடு செய்ய இருப்பது தெரிய வருகிறது. டிரம்ப் டவர்ஸ் ஏற்கனவே ஆறு புதிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. 8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் புனே, குரு கிராம், நொய்டா, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் குடியிருப்புகள் கட்டப்பட இருக்கின்றன. இவற்றை விற்பனை செய்வதன் மூலம் 15,000 கோடி ரூபாயை வருமானமாக ஈட்ட முடியும் என மேத்தா தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக புனேவில் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் டிரம்ப் ஆஃபீஸ் என்ற பெயரில் அலுவலக இடங்கள் கட்டப்பட இருக்கின்றன. மேற்கூறையில் இரண்டு டவர்களையும் இணைக்கும் வகையிலும் இந்த கட்டுமானம் இருக்கும் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான டிரம்ப் டவர்கள் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என மேத்தா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் மும்பை, புனே, குருகிராம் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் ட்ரம்ப் டவர்க்கு சொந்தமாக 3.5 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. குரு கிராம் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
இவை அனைத்துமே ஆடம்பரமான குடியிருப்புகள் என தெரிவிக்கும் மேத்தா பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் ,உயர் சொத்து மதிப்பு கொண்டு இந்தியர்களும் டிரம்ப் டவரில் குடியிருப்புகளை வாங்கி இருக்கின்றனர் என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications