இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஸ்டீபன் மில்லருக்கு டொனால்ட் டிரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இதனை அடுத்து டொனால்ட் டிரம்ப் தன்னுடைய அரசு நிர்வாகத்தில் புதிய பாலிசிகளுக்கான துணைத் தலைவராக ஸ்டீபன் மில்லர் என்பவரை நியமனம் செய்துள்ளார் .துணை அதிபராக தேர்வாகியிருக்கும் ஜேடி வான்ஸும் ஸ்டீபன் மில்லர் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்டீபன் மில்லர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமான நபர். டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து இவர் அவருடைய குழுவில் இடம் பெற்று இருக்கிறார். டொனால்ட் டிரம்ப்பின் முக்கியமான ஆலோசகராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக முதன்முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலங்களில் குடியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் டிரம்ப். அதில் முக்கிய பங்காற்றியவர் ஸ்டிபன் மில்லர் ஆவார்.
இவர் ஹெச்1பி விசாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் . ஹெச்1பு விசா எண்ணிக்கையை குறைப்பது, இந்த விசாவில் வருபவர்களின் சம்பள வரம்பை உயர்த்துவது போன்ற அறிவிப்புகளை இவர் பரிந்துரையின் பேரில் டிரம்ப் அரசு வெளியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறுவதில் கடுமையான கொள்கைகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டிரம்ப அதிபராக இருந்தபோது ஒரு எச்1பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான ஒரு மசோதா தயாரிக்கப்பட்டது. அதில் ஸ்டீபன் மில்லரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
அதாவது ஹெச்1பி விசா கோரி விண்ணப்பம் செய்யும் நபர்கள் வெளிநாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் ஆவது வேலை செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்யவே தகுதி பெறுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1.10 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் ஸ்டீபன் மில்லரின் ஆதிக்கம் கை ஓங்கும் என்றும் இது ஹெச்1பி விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சென்று வேலை புரியும் வெளிநாட்டவர்களை பெருமளவில் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் இந்த விசாவின் கீழ் தான் அமெரிக்காவில் சென்று பணி புரிகின்றனர் . ஒருவேளை இதில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டால் விண்ணப்பம் செய்து காத்திருப்பவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்று வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்.


Click it and Unblock the Notifications