அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு உடனடியாக 3 நாடுகள் மீது விரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டிரம்ப் சீனா மீது வரி விதிப்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இந்த பட்டியலில் மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை இணைந்துள்ளது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
டொனால்டு டிரம்ப் சமுக வலைத்தளத்தில் செய்த பதிவின் படி, தான் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டின் இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும் சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் டிரம்ப், சீனா அரசு அமெரிக்காவுக்குள் synthetic opioid fentanyl கடத்துவதை நிறுத்தும் வரையில் இந்த கூடுதல் 10 சதவீத வரி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் இந்த பட்டியலில் இந்தியாவை டொனால்டு டிரம்ப் சேர்க்காதது வியப்பாக உள்ளது, டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் மோடி உடனான நட்பை பாராட்டினாலும், இந்தியா மீது வரி விதிப்பதில் உறுதியாக இருந்தார், ஆனால் தற்போது வரி விதிக்கப்படவில்லை.
இந்த வரி விதிப்பு மூலம் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய உற்பத்தி திட்டங்களும், உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளும் திரும்ப அமெரிக்காவுக்கு வரும் என டொனால்டு டிரம்ப் தீவிரமாக நம்புகிறார். இதேபோல் இந்த வரி விதிப்பை அடிப்படையாக வைத்து சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுடன் வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்ற முடியும் எனவும் நம்புகிறார்.
இந்த வரி விதிப்பால் சீனாவில் இருந்து அடுத்தடுத்து பல நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கும் காரணத்தால் டிரம்ப், தனது வரி விதிப்பு பட்டியலில் இந்தியாவை நீக்கிவிட்டார் எனத் தெரிகிறது. கடந்த டிரம்ப் ஆட்சிக் காலத்தில் வரி விதிப்பாலும், கொள்கை மாற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டது மெக்சிகோ, சீனா, கனடா தான்.
இதனால் இந்த ஆட்சியிலும் டிரம்ப் டார்கெட் மாறவில்லை என்று தெளிவாகிறது. அமெரிக்க அரசு பொருத்த வரையில் அமெரிக்காவுக்குப் பிற நாட்டுக்கு மத்தியிலான வர்த்தக அளவை பொறுத்தே இத்தகைய வரி விதிப்பு செய்யப்படுகிறது. இப்படிப் பார்க்கும் போது இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக Economist Intelligence Unit அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications