டெல்லி: இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியவர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதிபரின் ஆதரவாளர்கள் பலரும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறது என வெளிப்படையாகவே சாடினார்.
இந்தியா மீது கடுமையான போக்கை காட்டி வந்த டிரம்ப் மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகம் திடீரென இந்தியாவை நட்புறவோடு அணுகத் தொடங்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 75ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் . இதனை அடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் டிரம்ப் "என்னுடைய நண்பர் நரேந்திர மோயிடம் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அளிக்கும் ஆதரவுக்கு நன்றி " என தெரிவித்திருக்கிறார்.
நண்பர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக அழைத்து 75ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள மோடி இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதில் தங்களைப் போலவே நானும் உறுதியாக இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைனில் அமைதியான தீர்வு காண நீங்கள் மேற்கொள்ள முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இந்தியா ரஷ்யா மற்றும் சீனாவிடம் அதிகளவில் நெருக்கம் காட்டத் தொடங்கியது . இது அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறத் தொடங்கியது . இந்தியாவை சீனாவிடம் விட்டு விட்டோம் என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார் டிரம்ப். இந்த சூழலில் தான் சீனாவிடமும் ரஷ்யாவிடமும் இந்தியா நெருக்கம் காட்டுவதை கண்டு இந்தியா மீதான தன்னுடைய அணுகுமுறையை தற்போது மாற்றி இருக்கிறது டிரம்ப் நிர்வாகம்.
இந்தியாவுடன் நட்புறவு பேணுவதில் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வாரம் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை தொடர்வதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அமெரிக்க வர்த்தகத் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர் .
இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் பிறந்த நாளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அவரை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியிருக்கிறார் டிரம்ப். இதன் மூலம் அமெரிக்கா இந்தியா மீதான தன்னுடைய அணுகுமுறையை மாற்ற தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது வர்த்தக ஒப்பந்தத்திலும் எதிரொலிக்கும் என்றும் இந்தியா மீதான வரி விதிப்பை குறைக்க செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை ஜவுளி உட்பட ஏற்றுமதி சார்ந்த பல்வேறு தொழில்களை நேரடியாகவே பாதித்துள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்க அரசுடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமாக வரிக்குறைப்பு அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் .


Click it and Unblock the Notifications