டொனால்ட் டிரம்ப்பின் நிதி நிலைமை, கடந்த ஒரு வருடத்தில் வியப்படையும் வகையில் வளர்ச்சி அடைந்து பலரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையிலிருந்த டிரம்ப் கடந்த ஒரு வருடத்தில் பண மழையில் குத்தாட்டம் போடும் வகையில் உயர்ந்துள்ளது.
டிரம்ப்-க்கு எதிராக 454 மில்லியன் டாலர் மோசடி வழக்கின் தீர்ப்பு மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நிலை ஆகியவை அவரை இருண்ட நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், ஜாக்பாட் ஆக தீர்ப்பு திருத்தி எழுதப்பட்டது. இந்த திருத்தப்பட்ட தீர்ப்பில் 175 மில்லியன் டாலருக்கான கேரன்டி கொடுத்தால் போதும் என அறிவிப்பு வந்தது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் எடுத்து வைத்து ஒவ்வொரு அடியும் பண மழை தான். டிரம்ப் சொந்தமாக உருவாக்கியுள்ள தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷல் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்தார். இந்நிறுவனம் நிலையான வருவாய் மற்றும் கணிசமான இழப்புகள் இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது டிரம்ப்பின் நிகர மதிப்பை பெரிய அளவில் உயர்த்தியது.
ஆயினும் இந்நிறுவனத்தில் பணப்புழக்கம் ஒரு சவாலாகவே இருந்தது. இதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் ட்ரூத் சோஷல் பங்கு அதன் உச்சத்திலிருந்து 72% சரிந்தாலும், காணாமல் போகவில்லை. இது மார்ச் 7 ஆம் தேதி நிலவரப்படி டிரம்ப்பை 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கொண்டவராக உயர்த்தியது.
இந்த பணப்புழக்க சிக்கலைத் தீர்க்க, டிரம்ப் கிரிப்டோ சந்தையில் நுழைந்தார், ஆரம்பத்தில் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், மீண்டும் விற்பனை செய்ய முடியாத டோக்கன்கள் மற்றும் "financial revolution" வாக்குறுதிகளுடன் புதிய முதலீட்டாளர்களை குறிவைத்தார்.
ஆரம்பத்தில் டிரம்ப் அறிமுகம் செய்த கிரிப்டோ மீது முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்த நிலையில், அதிபர் தேர்தலில் அவர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பெரிய அளவில் உயர்ந்தது. குறிப்பாக கிரிப்டோ துறையில் செல்வாக்கு மிக்க நபரான ஜஸ்டின் சன்னிடம் இருந்து பெறப்பட்ட 75 மில்லியன் டாலர் முதலீடு மூலம் பெரும் லாபம் அடைந்தார் டிரம்ப். இந்த ஒரு திட்டத்தில் இருந்து மட்டும் வரிக்குப் பிறகு சுமார் 245 மில்லியன் டாலர் லாபத்தை பெற்றார் டிரம்ப்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் $TRUMP என்ற டிஜிட்டல் டோக்கனை அறிமுகப்படுத்தினார், இது டிரம்ப் விஸ்வாசிகளிடம் இருந்து அதிகப்படியான முதலீட்டை ஈர்க்க உதவியது. இதில் வர்த்தக கட்டணமாக மட்டும் சுமார் 350 மில்லியன் டாலர் தொகையை பெற்றார் டிரம்ப், இதுமட்டும் தேர்தல் நேரத்தில் பல்வேறு கூட்டணிகள் மூலம் பல்வேறு பொருட்கள் அமெரிக்கா முழுவதும் விற்கப்பட்டது இதிலும் அதிகப்படியான வருவாய் ஈட்டினார் டிரம்ப்.
இதுதவிர ரியல் எஸ்டேட் சொத்துகள், நிதி ஆதாரம், ஹோட்டல், மைதானங்கள் என பல சொத்துக்களை வைத்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் 47 வது அதிபரான டொனால்டு டிரம்ப்-ன் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 2.3 பில்லியன் டாலரிலிருந்து 5.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications