அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் டிரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான திட்டங்களை நிறுத்தப் போவதாக தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போதே பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிர வைத்தவர்.
அப்போதில் இருந்தே புதுப்பிக்க தக்க எரிசக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அதிபராக பதவி ஏற்ற உடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான திட்டங்களை நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன. இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இயங்கக்கூடிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஒரே நாளில் சரிவை கண்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனமான Orsted நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேபோல காற்றாலைக்கான பாகங்களை தயாரிக்க கூடிய Vestas மற்றும் Nordex ஆகிய நிறுவனங்களின் மதிப்புகள் முறையே 11 மற்றும் 7.5 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.
இதற்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்பை பொருத்தவரை எப்போதுமே புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார். முன்னதாக தன்னுடைய தேர்தல் பரப்புரையின் போது சூரிய ஒளி மின் உற்பத்தி நடைமுறைக்கு எதிராக பேசினார்.
அதாவது சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பதற்காக சோலார் பேனல்களை நாம் நிறுவ வேண்டி இருக்கிறது. இத்தகைய சோலார் பேனல்கள் மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன என அவர் கூறியிருந்தார். இதற்காக ஒரு பாலைவனமே தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சர்வதேச சோலார் எரிசக்தி தொழில் கூட்டமைப்பு தற்போது உலக அளவில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு தேவைப்படும் இடத்தின் அளவு மிகவும் குறைவு என்றும் , 6 லட்சம் ஏக்கருக்கும் கீழ் தான் இத்தகைய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறுகிறது.
இதனிடையே தன்னுடைய தேர்தல் பரப்புரையில் கூறியதைப் போலவே டிரம்ப் பதவி ஏற்ற உடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அரசின் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவ்வாறு கொண்டு வந்தால் இந்த துறை சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசாங்கம் நிறுத்த கூடும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு டிரம்ப் நடவடிக்கை எடுத்தால் இந்த துறை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதன் காரணமாக நிறுவனங்கள் மீண்டும் புதை படிவ எரிபொருளை பயன்படுத்த வேண்டிய சூழல் உண்டாகும்.
இது சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவில் கேடு விளைவிக்கும் முன்னதாக மின்சார வாகன பயன்பாட்டுக்கு எதிராக பேசி வந்த டிரம்ப், பின்னர் எலான் மஸ்க் தனக்கு அளித்த ஆதரவை தொடர்ந்து தன் நிலைப்பாட்டை மாற்றினார்.


Click it and Unblock the Notifications