அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அந்நாட்டு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கூட ஓர் அரசாங்கமாக அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியர்களை ஏற்றி வரும் அமெரிக்க இராணுவ விமானம், சி-17, புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
இந்த 104 பேரில் பெரும்பாலும், குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. "குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பதிவுகள் மற்றும் சான்றுகளை சரிபார்த்த பிறகு விமானம் மூலம் தங்கள் மாநிலத்திற்கு அனுப்பப்படுவார்கள். மேலும் ஹரியானாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களும் இருப்பதால், அவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்களுடன் அமிர்தசரஸில் இறக்கிவிடப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது, வரும் 13ம் தேதி பிரதமர் மோடி, அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்கள் தாயகம் திரும்புவது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு குறித்து பஞ்சாப் NRI விவகார அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கூறுகையில், அவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பங்களித்துள்ளனர் என்றும், நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்வதற்குப் பதிலாக நிரந்தர வசிப்பிட உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் பஞ்சாபியர்கள் தொடர்பான கவலைகள் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க தலிவால் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து 18,000 ஆவணமற்ற இந்திய குடியேறிகளை திரும்பப் பெற இந்தியா தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வர உதவ தயாராக இருப்பதாகக் கூறியது. சட்டவிரோத குடியேற்றம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையது என்பதால் இந்தியா அதற்கு எதிரானது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 220,000 ஆவணமற்ற இந்திய குடியேறிகள் இருந்தனர்.
இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications