அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனே டொனால்ட் டிரம்ப் பல்வேறு முக்கியமான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். சர்வதேச அளவில் இவை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம், வீட்டில் இருந்து பணிபுரியும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பன உள்ளிட்ட முக்கிய உத்தரவுகள் இதில் அடங்கும்.
ஜோ பைடன் அரசின் உத்தரவுகளை திரும்ப பெறுவது: முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொண்டு வந்த 80 உத்தரவுகளை திரும்ப பெறுவதற்கான ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். பைடன் அரசு கொண்டுவந்த இந்த 80 நடவடிக்கைகளும் அமெரிக்காவை பின்னோக்கி அழைத்துச் செல்லக் கூடியவை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Work From Home நடைமுறைக்கு முற்றுப்புள்ளி: அமெரிக்க அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் பெரும்பாலான அமெரிக்க அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். தற்போதும் பலரும் அதனையே தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் டிரம்ப் நிர்வாகம் அதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
அரசு ஊழியர்கள் நியமனம் நிறுத்தம்: அரசு நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே கூறி வருகிறார் டிரம்ப், அதன் முதல் படியாக தற்காலிகமாக அரசு ஊழியர்கள் தேர்வினை நிறுத்தி வைத்திருக்கிறார். அரசு ஊழியர்கள் நியமன முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட பிறகே மீண்டும் புதிதாக வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம்: உலக அளவில் புவி வெப்பமயமாதல் பெரிய பிரச்சினையாக இருந்து வரும் நிலையில் புவி வெப்பத்தை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலக அளவில் அதிக கார்பன் வெளியீடு செய்து காற்று மாசுக்கு காரணமாக இருக்கும் நாடான அமெரிக்கா பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருப்பது சர்வதேச நாடுகளுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சு சுதந்திரம்: பைடன் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கர்களின் பேச்சு சுதந்திரத்திற்கு பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டது இனி அமெரிக்கர்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரத்துடன் வெளிப்படுத்தலாம் என டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது: அமெரிக்கா அரசு உலக சுகாதார கூட்டமைப்பான WHOவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கிறார். உலக சுகாதார கூட்டமைப்பு கொரோனா பெருந்தொற்று மற்றும் பிற சர்வதேச சுகாதார பிரச்சனைகளை சரியான முறையில் கையாளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லைப் பகுதியில் தேசிய அவசரநிலை: முறைகேடாக அமெரிக்காவில் பலர் குடியேறுவதை தடுப்பதற்கான பல்வேறு புதிய சட்டங்களை டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்து அதில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி மெக்சிகோ உடன் இருக்கும் தென் எல்லையில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எல்லை கடந்த அமெரிக்காவுக்குள் வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எல்லையில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்: அமெரிக்காவில் பணவீக்க பிரச்சனை அதிகரித்து பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் அந்தந்த துறை சார்பாக விலை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.
டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி உள்ள டிரம்ப் நிர்வாகம் 75 நாட்களுக்குள் டிக் டாக் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் தங்களுடைய செயலியின் கணிசமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications