வாசிங்டன்: ஏன் உலக வங்கி சீனாவுக்கு அதிகம் கடன் கொடுக்கிறது..? சீனாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அவர்களிடம் பணம் இல்லை என்றாலும் அவர்கள் பணத்தை உருவாக்கிக் கொள்வார்கள். உலக வங்கி சீனாவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச அரங்கில் தன் கோபத்தை பதிவு செய்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 10 பில்லியன் டாலருக்கு மேல் நாமினல் ஜிடிபி கொண்ட நாடு சீனா தான். சீனாவின் மொத்த நாமினல் ஜிடிபி சுமராக 13.5 ட்ரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் தான் உலக வங்கியின் மிகப் பெரிய கடன் வாங்கும் வாடிக்கையாளர் நாடு என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஏன் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்படி கோபத்தில் கொப்பளிக்கிறார்..? சமீபத்தில் தான், உலக வங்கி, சீனாவுக்கு அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு, ஆண்டு தோறும் 1 - 1.5 பில்லியன் டாலர் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க முன் வந்தது. அதுவும் வரும் ஜூன் 2025 வரை கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் உலக வங்கியினர்.
இந்த விஷயம் தெரிய வந்த பின் தான் நம் டொனால்ட் ட்ரம்ப் கோபத்தில் முகம் சிவக்க, சீனாவிடம் பணம் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முன்சின்னும், சீனாவுக்கு உலக வங்கி கடன் கொடுப்பதற்கு தன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். அதோடு சீனாவை குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி, மேலே கொண்டு வரமாறும் தன் கருத்தை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் நிதி கமிட்டியின் தலைவர் சார்லஸ் க்ராஸ்லியும், உலக வங்கி, சீனாவுக்கு கடன் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார். மனித உரிமைகளை மீறும், பலவீனமான நாடுகளின் மீது ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு உலக வங்கியில் இருந்து அமெரிக்க வரிப் பணத்தை கடனாகக் கொடுக்கக் கூடாது என தன் எதிர்ப்பைப் பதிவ செய்து இருக்கிறார். இத்தனை நடந்த பிறகும், உலக வங்கி சொன்ன படி, சீனாவுக்கு கடன் கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications