ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கை தொடங்கின. இந்த போர் கிட்டத்தட்ட ஆறு வார காலம் நீடித்தது. இந்த சூழலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியது.
சீனா ,எகிப்து, ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரானும் அமெரிக்காவும் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டன. தற்காலிகமாக இரண்டு வார கால போர் நிறுத்தமும் அமலில் இருக்கிறது. சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் முன்னிலையில் நடத்தப்பட்ட இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. இந்த சூழலில் எந்நேரமும் ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் போரை தீவிர படுத்தலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தி டிராப் நியூஸ் சைட் என்ற இணையதள பக்கத்தில் வெளியாகி இருக்கக்கூடிய ஆவணங்களில் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறதாம். அந்த ஒப்பந்தத்தின் படி சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு எந்த ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் பாகிஸ்தான் அவர்களுக்கு துணை நிற்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் சவுதி அரேபியா கோரிக்கை வைக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவிகளை கூட வழங்கும் என அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது தவிர பாதுகாப்பு துறையில் அனைத்து விதமான ஒத்துழைப்பு தருவது என அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருக்கிறதாம். ஈரான் ஏற்கனவே சவுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் சவுதி கோரினால் பாகிஸ்தான் தன்னுடைய படைகளை அனுப்பியே ஆக வேண்டும்.

இந்த நிலையில் இதுவரை பொதுவெளியில் வராத இந்த ஆவணங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, ஈரானுடன் பாகிஸ்தான் நீண்ட தூர எல்லையை பகிர்கிறது. இதனால் ஈரானை கண்காணிப்பதற்கும் ஈரான் தொடர்பான ரகசிய ஆயுதங்கள் மற்றும் ஈரான் தலைவர்கள் தொடர்பான தகவல்களை உளவு பார்ப்பதற்கும் பாகிஸ்தான் நாட்டின் எல்லை மிகவும் உதவியாக இருக்கும். ஏற்கனவே அயத்துல்லா அலி கமேனியின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு பாகிஸ்தான் தான் உதவியாக நிற்கிறது என்ற குற்றச்சாட்டு வெளிவந்தது.
அந்த வகையில் ஈரானுக்கு எதிரியாக இருக்கக்கூடிய இரண்டு நாடுகளோடும் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. அது தவிர இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுக்கு பெரிய நிதி உதவியும் செய்துள்ளன. எனவே பாகிஸ்தான் அவர்களுக்கு இணங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. இதனால் தான் பாகிஸ்தான் மீது நம்பகத்தன்மை இல்லை என ஈரான் தரப்பு தொடர்ந்து கூறி வருவதாகவும் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு முதலில் மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இல்லாமல் இந்த முறை ஜெனீவாவில் நடத்த திட்டமிடப்படுகிறதாம். இது ஒருபுறம் இருக்க தற்போது சவுதி அரேபியாவின் முக்கிய தளங்களில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு புறம் ராணுவ உதவி என சவுதியோடு ரகசிய ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான் மறுபுறம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் செய்ய முயற்சிப்பது முரண்பாடான ஒரு நிலைப்பாடாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications