வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒருவர் ஈகோவை விட்டொழிக்க வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் மற்றும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் டாக்டர் ஏ.வேலுமணி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஈகோ தனிப்பட்ட உறவுகளை மட்டுமல்ல தொழில்முறை உறவுகளையும் பாதிக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு போஸ்ட்டைப் பகிர்ந்திருந்தார்.
வேலுமணி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "எந்தவொரு தொழிலையும் தொடங்க ஈகோவை விட்டுவிட வேண்டும்" என்று கூறும் ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, தொழிலுக்கு மட்டுமல்ல... தொழில், திருமணம் என எதுவாக இருந்தாலும், ஈகோ வலியை அதிகரித்து இன்பத்தை அழித்துவிடும். ஈகோ எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, உறவுகள் அவ்வளவு பலவீனமானதாக மாறும்" என்று எழுதியிருந்தார்.

இவருடைய கூற்றுக்கு பல X பயனர்கள் தங்கள் ஆதரவை வழங்கத் தொடங்கினர். ஒரு பயனர் ஈகோ என்பது "EDGING GOOD OUT" என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது நல்லதையெல்லாம் வெளியேற்றுதல் என்பது பொருள். இதை எங்கோ தான் படித்ததாக கூறி இருந்தார்.
டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி அன்று கோயம்புத்தூருக்கு அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் தன் சுயமுயற்சியால் உயர்ந்த பில்லியனர் ஆவார். இவர் சுகாதார துறையில் ஒரு முன்னோடி தொழில் முனைவோர். சுகாதார சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நெட்வொர்க்கான தைரோகேர் டெக்னாலஜி லிமிடெட்-இன் நிறுவனர் இவர் தான். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் நோய் அறியும் சோதனைக்கு பெயர் பெற்றது.

தைரோகேருடன் கூடுதலாக டாக்டர் வேலுமணி, புற்றுநோய் கண்டறியும் நிறுவனமான நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்-டையும் நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புற்றுநோய் மற்றும் பிற நோய்களை கண்டறிவதில் சிறந்த விளங்கி வருகிறது. வேலுமணியின் பங்களிப்புகள் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர டெஸ்ட்களை எடுக்கும் வசதியை வழங்கி உள்ளார். இதன் மூலம் சாமானியர்களும் தரமான மருத்துவ பரிசோதனைகளைப் பெற்று வருகின்றனர்.
2021-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி தைரோகேர் டெக்னாலஜி லிமிடெட் ரூ.7000 கோடி சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. வேலுமணி ரூ.5,000 கோடி மதிப்புள்ள பங்குகளை கொண்டுள்ளார். எளிமையான தொடக்கத்திலிருந்து பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கிய இவருடைய பயணம் பிற ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு உதாரணமாக அமைகிறது.


Click it and Unblock the Notifications