இந்தியாவின் பொருளாதாரத்தைத் திவாலாகும் நிலையில் இருந்து வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக மாற்றிய 2 முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது 92வது வயதில் வியாழன் அன்று காலமானார். இன்று காலை அவருக்கு டெல்லியில் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து ஒரு முக்கியமான புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மன்மோகன் சிங்-ன் வாழ்க்கையில் பல முக்கியமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் ஒரு சில விஷயங்களை அவரின் இதயத்தை தொடும் வகையில் அமைந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று தான் 2008 இல் பாகிஸ்தானைச் சேர்ந்த தனது பால்ய நண்பரான ராஜா முகமது அலி அவர்களைச் சந்தித்தது.

செப்டம்பர் 26, 1932 இல், பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாபில் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ள கா என்ற கிராமத்தில் பிறந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை 1947 இன் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் குடும்பம் கா-வை விட்டு இந்தியாவுக்குக் குடியேறும் நிலை உருவானது. அதனால் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டையும் நண்பர்களையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியாவுக்கு வந்த அவர் படிப்பு, வெளிநாட்டுப் பயணம், அரசியல் ஈடுபாடு, முக்கிய பதவிகள் என பல விஷயங்களில் அவரின் காலம் கடந்து ஓடியது. ஆனாலும் அவருடைய பால்ய கால நினைவுகளையும், நண்பர்களையும் மறக்காமல் இருந்தார் மன்மோகன் சிங்.
இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமரானபோது, அவரது பழைய பள்ளித் தோழரான ராஜா முகமது அலியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர், ஒரே ஆரம்பப் பள்ளியில் பயின்றார்கள், அங்கு அலி அவரை அன்புடன் 'மோஹ்னா' என்று அழைப்பாராம்.
இந்த நிலையில் பல வருட முயற்சிகளுக்கு பின்பு மன்மோகன் சிங் அவருடைய ராஜா முகமது-வை கண்டுபிடித்து மே 2008 இல், பல தசாப்தங்களாகப் பிரிந்த நண்பரை டெல்லியில் சந்தித்தனர். இருவரும் சந்தித்த உடனேயே ஆரத்தழுவிக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இந்த புகைப்படம் மன்மோகன் சிங்கிற்கு இறுதி சடங்கு நடக்கும் நாளில் டிரெண்டாகி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications