நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ். இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் மருந்து துறையில் புதிய வணிக பிரிவுகளில காலடி வைத்துள்ளது. அண்மையில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் ஊட்டச்சத்து மருந்துகள் (நெஸ்லேவுடன் கூட்டு வணிகம்) மற்றும் டிஜிட்டல் சிகிச்சை முறைகளில் நுழைந்தது, மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
இந்த புதிய வணிக நடவடிக்கையை சிறப்பாக கொண்டு செல்ல, கடந்த ஆண்டுகளில் அதிகளவில் பணியாளர்களை நியமனம் செய்தது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் இந்த புதிய வணிகம் எதிர்பார்த்தப்படி சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிறுவனம் தனது பணியாளர்களை குறைக்க வேண்டியது இருக்கும் ஆய்வாளர் ஒருவர் அப்போதே தெரிவித்து இருந்தார் என தகவல்.

இந்நிலையில், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் தனது பணியாளர்களின் செலவை கிட்டத்தட்ட 25 சதவீதம் குறைக்கும் நோக்கில், கணிசமான ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறவனத்தின் ஒருங்கிணைந்த பணியாளர்கள் செலவினம் ரூ.1,367 கோடியாக உள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்ட பணியாளர்கள் செலவினமாக ரூ.1,276 கோடியை காட்டிலும் சுமார் 7 சதவீதம் அதிகமாகும்.
பணியாளர் செலவினம் அதிகரித்துள்ளது என்பது ஒரு புறம் இருந்தாலும், புதிய வணிக முயற்சி சிறப்பாக செயல்படவில்லை என்பதால்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் எடுத்துள்ளது என கூறப்படுகிறது. காதும் காதும் வைத்தது போல் நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களும் அடங்குவர் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் அண்ட் டி) பிரிவில் பணிபுரியும் 50-55 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. பல்வேறு துறைகளில் அதிக சம்பளம் வாங்கும் பல நபர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் சிகிச்சை பிரிவு முழுவதுமாக மூடப்படலாம். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மருந்து பிரிவில் சில ஆட்குறைப்புகள் நடக்கலாம். இதன் விளைவாக 300-400 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிறுவன பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications