இந்திய ரயில்வே நெட்வொர்க் உலகின் 3-வது மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். இதன் மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ரயில் பயணங்களை பலரும் தேர்ந்தெடுக்கக் காரணம் குறைந்த டிக்கெட் கட்டணம். பிற போக்குவரத்தோடு ஒப்பிடுகையில் ரயில் கட்டணங்கள் சாமானியர்களுக்கு உதவிகரமானதாக உள்ளது. இப்படி ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து பயணம் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மதிப்புமிக்க பொருட்களான பர்ஸ் அல்லது மொபைல் போன் தவறுதலாக கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
முதலில் உங்கள் பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் மதிப்பு மிக்க பொருட்கள் கீழே விழுந்து விட்டால் பதட்டம் அடைய வேண்டாம். அதை மீட்டெடுப்பதற்கு நீங்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். முதல் விஷயம் டிரெயினில் இருக்கும் செயினை இழுத்து நிப்பாட்ட வேண்டாம். ஏனெனில் இதற்கு அபராதம் செலுத்த வேண்டிய வாய்ப்புகள் ஏற்படும். அதோடு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரயில் விபத்துகள் அல்லது வேறு ஏதேனும் அவசர தேவைகளுக்கு மட்டுமே செயினை இழுத்து ரயிலை நிறுத்த வேண்டும். மற்றபடி உங்கள் அஜாக்கிரதையின் காரணமாக இது போன்ற தவறுகள் ஏற்பட்டால் அதை வேறு சில வழிமுறைகளை பின்பற்றி தான் சரி செய்ய வேண்டும்.
பர்ஸ் அல்லது மொபைல் போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?: உங்கள் சாமான்கள் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதி இருக்கும் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளவும். ரயில் டிக்கெட் செக்கரிடம் இந்த எண்ணை கொடுங்கள். அவர் எந்த ஸ்டேஷனுக்கு முன்பு கீழே விழுந்தது என்பது குறித்து அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு தெரிவிப்பார். அதன் பிறகு ரயில்வே காவல் படையின் உதவி எண்ணான 182 அல்லது ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணான 139-க்கு அழைப்பு விடுத்து நடந்த விஷயங்கள் குறித்து தெரிவியுங்கள்.
குறிப்பிட்ட இடத்தில் உங்களுடைய பொருட்களை போலீசார் கண்டுபிடித்தவுடன் மீட்டெடுத்து உங்களிடமே திருப்பித் தருவார்கள். தவறுதலாக உங்கள் உடமைகள் கீழே விழும் பட்சத்தில் இந்த வழிமுறைகளை பின்பற்றி மீட்டெடுக்கலாம்.
ஏதேனும் பொருட்கள் கீழே விழுந்துவிட்டால் உடனடியாக ட்ரைனை நிறுத்த வேண்டும் என்றுதான் பதட்டத்தில் பலர் யோசிப்பார்கள். ஆனால் இது போன்ற அவசர முடிவெடுப்பது உங்களை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம். இதற்கு அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையும் வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications