கலிபோர்னியா: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (USFDA) சமீபத்திய அறிக்கையின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (Dr Reddy's Laboratories), சன் ஃபார்மா (Sun Pharma) மற்றும் அரவிந்தொ ஃபார்மா (Aurobindo Pharma) ஆகியவை தங்களுடைய சில மருத்துத் தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெறுகின்றன.
பெரும்பாலும் அனைத்து தயாரிப்புகளும் FDA மூலம் Recall செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் கிளாஸ் 1 கிளாஸ் 2 மற்றும் கிளாஸ் 3 என மூன்று வகைகள் உள்ளது. இவற்றை ரோமானிய எண்களான I, II, III என்பதைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். கிளாஸ் I என்பது மிகவும் தீவிரமான அல்லது ஆபத்தை விளைவிக்க கூடிய தயாரிப்புகள், கிளாஸ் II என்பது ஆபத்தானது, கிளாஸ் III என்பது குறைந்த ஆபத்தானது. ஒரு நிறுவனம் தயாரிப்புகளை இந்த கிளாஸ்களின் அடிப்படையில் திரும்பப் பெறப்படுகிறது.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள பினைல்அலனின் (phenylalanine) அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுமார் 20,000 மருந்துப் பெட்டிகளைத் திரும்ப பெறுவதாக டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் அறிவித்துள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டனில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அதன் ஒரு தயாரிப்பான Javygtor (sapropterin dihydrochloride) Powder for Oral Solution (100mg) என்ற மருந்தையும் திரும்பப் பெறுகிறது. USFDA அமைப்பு, இந்த மருந்துகள் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறியதை அடுத்து, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதே காரணத்திற்காக டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம், அதன் மற்றொரு தயாரிப்பான sapropterin dihydrochloride என்ற மருந்தையும் திரும்பப் பெறுகிறது. இதற்கான கிளாஸ் I recall, ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்று, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க சந்தையில் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஊசி மருந்தான Amphotericin B Liposome எனும் மருந்தின் 11,016 குப்பிகளை சன் ஃபார்மா திரும்பப் பெறுவதாக USFDA தெரிவித்துள்ளது. USFDA கூற்றுப்படி, இந்த வகை மருத்துத் தயாரிப்புகளின் செயல்திறனில் சிக்கல்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் சன் ஃபார்மா அவற்றைத் திரும்பப்பெறத் தொடங்கியுள்ளது.
அரவிந்தோ பார்மா: அதேபோல், அமெரிக்க சந்தையில் சைக்காலஜி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 13,605 பாட்டில்கள் Clorazepate Dipotassium மாத்திரைகளை (3.75 மிகி மற்றும் 7.5 மிகி) அரவிந்தோ பார்மா திரும்பப் பெறுகிறது. USFDA கூற்றுப்படி, இந்த மாத்திரைகளில் மஞ்சள் புள்ளிகளுடன், நிறமாற்றம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு மருந்து நிறுவனமான FDC லிமிடெட், கிளௌகோமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 3,82,104 யூனிட் Timolol Maleate Ophthalmic Solution-களை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக USFDA தெரிவித்துள்ளது. அவுரங்காபாத்-ஐ (மகாராஷ்டிரா) சார்ந்த FDC லிமிடெட் மருந்து நிறுவனம், மருந்து அனுப்பிய கண்டெய்னர்களில் பிரச்சனை இருப்பதால் அதன் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுகிறது.
2019 ஆம் ஆண்டில் 115.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன், மருந்து தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது.


Click it and Unblock the Notifications