துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட சிறிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரான் ஏவுகணையை வானத்திலேயே தாக்கப்பட்ட நிலையில், இந்த ஏவுகணை பாகங்கள் விமான நிலைய பகுதியில் விழுந்தன. ஆனால் இது சிறிய அளவிலானது மட்டுமே என்றும், எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் "விமான நிலையத்தில் பெரிய சம்பவம் நடந்தது" என்று பரவிய தகவல்களை துபாய் விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் நடந்த காரணத்தால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் துபாய் விமான நிலைய செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை.

எமிரேட்ஸ் விமானங்கள்
எமிரேட்ஸ் நிறுவனம் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மற்றும் அதிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் சிறிது நேரத்திலேயே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் X தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று மதியம் எங்கள் விமானத்தில் டிக்கெட் புக் செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் விமான நிலையத்திற்கு வரலாம். துபாய் வழியாக இணைப்பு விமானம் உள்ள பயணிகளும் வரலாம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவுரை அளித்துள்ளது. மதியத்திற்கு மேல் டிக்கெட் புக் செய்த பயணிகழ் விமான அட்டவணை மற்றும் இருக்கை கிடைக்கும் தன்மையை அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்த்த பிறகே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப விமான அட்டவணையை மாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகள்
சனிக்கிழமை துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் பதற்றம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும், ஏவுகணை எச்சரிக்கை இருந்தபோதிலும் பெரிய சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
பல வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதற்கு நன்றி தெரிவித்தனர். UAE அரசின் வெளியேற்ற முயற்சிகளை பாராட்டினர். இது இந்திய பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications