துபாய் அரசு தன்னுடைய விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால் துபாய்க்கு செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. துபாயில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் தேதி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெற இருக்கிறது.
பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி இதுவாகும். இதற்காக பல்வேறு இந்தியர்களும் துபாய்க்கு செல்ல திட்டமிட்டு இருக்கும் நிலையில் துபாய் அரசு தன்னுடைய விசா நடைமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவிலிருந்து துபாய்க்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் எந்த ஹோட்டலில் தங்குகிறார்களோ அந்த ஹோட்டலில் முன்பதிவு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் ரிட்டன் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்யும் நபர்கள் அங்கே யாருடைய வீட்டில் தங்குகிறார்களோ அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்க்கான வாடகை ஒப்பந்த பத்திரம், அவர்களுக்கு இருக்கும் எமிரேட்ஸ் ஐடி , ரெசிடென்ஸ் விசா காபி உள்ளிட்டவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என துபாய் அரசு புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் துபாய்க்கு பயணம் செய்ய திட்டமிட்டிருக்கும் இந்தியர்கள் குறிப்பாக குடும்பத்தோடு பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கும் இந்தியர்கள் தற்போது சிக்கலில் நிற்கின்றனர். ஹோட்டல் முன்பதிவு ஆவணம், ரிட்டன் டிக்கெட் உள்ளிட்டவற்றை கேட்பது சரியானதுதான், ஆனால் நாம் எந்த உறவினர் வீட்டில் தங்க போகிறோம் அவருடைய அடையாள ஆவணங்களை கேட்பது பொருத்தமானதாக இல்லை என பெரும்பாலான இந்திய பயணிகள் கருதுகின்றனர்.
எனவே உறவினர் வீடுகளில் தங்காமல் ஹோட்டல்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம், இது அவர்களின் சுற்றுலாக் கட்டணத்தை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ஒடிசி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நிகில் தாகூர் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் குடும்பத்துடன் ஒரு நபர் ஒரு ஹோட்டலில் தங்க வேண்டும் எனில் ஒரு நாள் இரவுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும், அது மட்டும் இன்றி துபாயில் தங்கி வசிக்கும் நபர்கள் தன்னுடைய எமிரேட்ஸ் ஐடி, வாடகை பத்திரம் ஆகியவற்றை பகிர்வதற்கு தயக்கம் காட்டுவர் என்கிறார்.
எனவே நடப்பு ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு துபாய்க்கு பயணம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையும் என சுற்றுலாத் துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பலரும் குடும்பத்தோடு துபாய் சென்று சுற்றி பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த புதிய விசா நடைமுறைகள் மூலம் அது இனி குறையும் என தெரிவிக்கின்றனர்.
துபாயில் சுற்றுலாவுக்காக சென்று ஹோட்டலில் தங்கி சுற்றிவிட்டு திரும்ப வருபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அங்கு இருக்கும் நண்பர்கள் வீட்டில் அல்லது உறவினர்கள் வீட்டிலோ தங்கலாம் என்ற எண்ணத்தில் செல்பவர்களுக்கு இந்த புதிய விசா நடைமுறை பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications