மத்திய கிழக்கு பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழும் துபாயில் கடும் மழை பெய்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகின் மிகப்பெரிய சர்வதேச பயணிகள் விமான நிலையமான துபாய் இண்டர்நேஷன்ல் ஏர்போர்ட் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளிலும் கடும் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் பருவநிலை நிபுணர்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் தான் இத்தகைய தீவிர வானிலை சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.

துபாயில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்ற அச்சம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. இந்த பெரும் மழையாலும், பெரும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் துபாயின் வர்த்தகம், பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படும்..?
விமான போக்குவரத்து பாதிப்பு: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடும் மழை பெய்ததால், செவ்வாய்க்கிழமை அன்று துபாய் இண்டர்நேஷன்ல் ஏர்போர்ட்-ல் பல விமானங்களை வேறு விமான நிலையத்திற்குத் திருப்பி விட்டது.
இந்த சர்வதேச பயணிகள் விமான நிலையம், 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்கத் தயாராக இருந்த நிலையில், திடீர் மழையால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, இரவு 7:26 மணி (1526 GMT) முதல் விமானத்தின் லேண்டிங் நிறுத்தப்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, படிப்படியாக விமான வருகையை மீண்டும் தொடங்கியது. விமான புறப்பாடுகளிலும் தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறின.
துபாய் நகரின் வருவாய் ஈட்டும் முக்கியமான ஒரு பிரிவு அதன் விமானச் சேவை இயக்கம், ஆசியாவையும் அமெரிக்கா, ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள் விளங்குகிறது. இதில் முக்கியமாகத் துபாய் ஒரு பெரும் வர்த்தகம், முதலீட்டு நகரமாக இருக்கும் காரணத்தால் சர்வதேச விமான போக்குவரத்தில் துபாய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.
இந்த நிலையில் துபாயில் பெய்த பெரும் மழை 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்குவதைத் தடுத்தது, இதுமட்டும் அல்லாமல் பல ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகள் துபாயை விட்டு வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
துபாய் நகரின் பாதிப்பு: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய இந்த கடும் மழையால், மத்திய கிழக்கின் நிதி மையமான துபாய் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற முக்கிய ஷாப்பிங் நிலையங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன, சில சாலைகள் சேதமடைந்துள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின்படி, துபாய் மெட்ரோ நிலையம் ஒன்றில் குறைந்தது மூட்டளவு உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியிருப்பது தெரிகிறது.
எதிர்காலத்தை நோக்கிய எச்சரிக்கை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இந்த புயல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
இதனால் இனி வரும் நாட்களில் வளைகுடா நாடுகள் வெளியில் மட்டும் அல்லாமல் பெரும் மழையை எதிர்கொள்ளவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications