துபாய் இமிகிரேஷன் துறை சில வாரங்களுக்கு முன்பு துபாய்-க்கு சுற்றுலா விசா பெறுவதற்கு, QR குறியீடுடன் கூடிய ஹோட்டல் பதிவு ஆவணங்கள் மற்றும் திரும்ப சொந்த ஊருக்கு செல்லும் டிக்கெட் நகலை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்தது பலருக்கும் நினைவிருக்கும்.
இந்த கட்டுப்பாடு தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது, இந்திய பயணிகள் துபாய் செல்ல திட்டமிடுபவர்கள் கடுமையான விசா விதிமுறைகளால் அதிக சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆவணக் கோரிக்கைகள் அடிப்படையில் அதிகப்படியான விசா நிராகரிப்புகளை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தமிழர்களும், இந்தியர்களும் அதிகம் வசிக்கும் வெளிநாட்டு நகரங்களில் ஒன்று துபாய். இந்நகரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் பயணித்து வரும் வேளையில் துபாய் அரசு விசா முறையில் செய்துள்ள புதிய மாற்றம் மற்றும் புதிய நடைமுறைகள் இந்தியர்களுக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது.
இதுக்குறித்து டிராவல் ஏஜென்சி கூறுகையில் முன்பெல்லாம் கிட்டத்தட்ட 99% விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. சமீபத்திய மாதங்களில், நன்கு தயாரிக்கப்பட்ட பயணிகள் ஆவணங்கள் கூட நிராகரிக்கப்படுவது அதிகரித்துள்ளன.
புதிய விதிமுறைகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகள், திரும்ப செல்வதற்கான விமானபயண டிக்கெட் மற்றும் உறவினர்களுடன் தங்கும் சந்தர்ப்பங்களில் கூடுதல் தங்குமிட ஆதாரம் உள்ளிட்ட கவனமான ஆவணங்கள் அளிக்கப்படுகிறது. ஆயினும் கூட, பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன, இது பயணிகளுக்கு கணிசமான நிதி இழப்புகளை ஏற்படுத்துகிறது என டிராவல் ஏஜென்சிகள் புலம்புகின்றன.
இந்த புதிய விசா நடைமுறைகள் மூலம் நிராகரிப்பு விகிதம் அதிகரித்தது தனிநபர் பயணிகளை மட்டுமல்லாமல் குரூப் டிராவலர்களையும் பாதித்துள்ளது என டிராவல் ஏஜென்சிகள் கள நிலவரத்தை விவரிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மொத்த குழு பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் கணிசமான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது ஹோட்டல் முன்பதிவு ஆவணங்கள் மற்றும் திரும்ப சொந்த ஊருக்கு செல்லும் டிக்கெட் ஆவணங்கள் கேட்கப்படுவதால், விசா நிராகரிப்பு நடந்தால் இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை அனைத்தும் வீண். இது துபாய் செல்ல ஆசைப்படும் மக்கள் மத்தியில் பெரும் இடியாக உள்ளது.
இதனாலேயே டிராவல் ஏஜென்சிகள் பயணிகள் அனைத்து ஆவணங்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்து, விசா நிராகரிப்பு அபாயத்தை குறைக்க புதிய விதிமுறைகளை கொண்டு வருமாறு கடந்த சில நாட்களாக கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications