சர்வதேச அளவில் வரிகள் குறைவாக மற்றும் சில நேரங்களில் வரிகள் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. துபாயில் வரிகள் குறைவாக இருப்பது மற்றும் சில நேரங்களில் வரிகள் இல்லாமல் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களை அது ஈர்க்கிறது.
இதனால்தான் அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் முதல் நம்மூர் சினிமா நட்சத்திரங்கள் வரை துபாயில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். பொதுவாக எந்தவொரு அரசுக்கும் வருமானம் முக்கியம், அந்த வருமானமும் வரிகள் வாயிலாகத்தான் பெரும்பாலும் கிடைக்கும். ஆனால் வரிகள் இல்லாத சூழலில் வருமானத்துக்கு துபாய் என்ன செய்யும்? என்ற கேள்வி நமக்கு எழும். அதற்கு விடை அந்நாட்டின் சுற்றுலாத் துறைதான்.

வரி அமைப்பு
துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார கொள்கை வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த இலக்கை அடையும் நோக்கில் வரி கட்டமைப்பை துபாய் அமைத்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஈட்டும் லாபம் மற்றும் வருமானத்தின் மீது குறைந்தபட்ச வரி விதிப்பது மற்றும் சில சூழல்களில் வரிகள் இல்லாத வகையில் துபாயில் வரி அமைப்பு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. மேலும் ஒரு செழிப்பான ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பை வளர்க்கிறது.
பெருநிறுவன வரி
கொள்கையளவில், துபாயில் நேரடியாக பெறப்படும் அனைத்து வருமானம் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில், செயலற்ற மற்றும் செயலில் உள்ள முதலீடுகள், டிவிடெண்ட் மற்றும் மூலதன ஆதாயங்கள் ஆகியவையும் அடங்கும். இருப்பினும்,2023 ஜூன் முதல் அங்கு பெறுநிறுவன வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
துபாயில் மட்டுமே செயல்படும் பிரதான நிலப்பகுதி சார்நத நிறுவனங்களுக்கு பொருந்தும். இருப்பினும் ஆண்டுக்கு 90,000 யூரோ (சுமார் ரூ.81 லட்சம்) வரை வருமானம் ஈட்டும் சிறு நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவை பாதிக்கப்படாது.
வாட் வரி
2018க்கு முன்பு வரை துபாய் உள்பட அமீரகத்தின் எந்த பகுதியிலும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) கிடையாது. 2018 ஜனவரி 1ம் தேதி முதல் துபாய் உள்பட அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 சதவீதம் நுகர்வு வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாட் சில விதிவிலக்குகளுடன் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொருந்தும்.
துபாய் விமான நிலைய இலவச மண்டலம் போன்ற இலவச மண்டலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் தங்கள் ஆண்டு வருமானம் 3.75 லட்சம் தினாரை தாண்டினால் வாட் வசூலிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் முதலில் வாட் வரியை செலுத்தினாலும் பின்பு அதனை திரும்ப பெற தகுதியுடையவை.
வருமானத்தை கொட்டும் சுற்றுலா
துபாயின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக சுற்றுலா உள்ளது. இத்துறையின் வாயிலாக கணிசமான வருவாய் கிடைக்கிறது. 2019ம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா பயணிகளால் துபாய் நிர்வாகத்துக்கு 3,400 கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ளது. 2021 மற்றும் 2022க்கு இடையில் துபாய்க்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 187 சதவீதம் அதிகரித்துள்ளது.
துபாயில் நடந்த எக்ஸ்போ 2022 நிகழ்வு வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்தியது. சர்வதேச அளவில் வெளிநாட்டவர்கள் அதிகம் சுற்றிப்பார்த்த நான்காவது பெரிய நகரமாக துபாயின் நிலையை உறுதிப்படுத்தியது.


Click it and Unblock the Notifications