மும்பை: அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி கணித்தபடி இருக்காது என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வேகமாக சரிவடைந்து வருகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை பூதாகரமாகி வருகிறது. உற்பத்தி சரிவு, பணவீக்கம் என பல பிரச்சினைகளை அந்த நாடு எதிர்கொண்டிருக்கிறது.

எனவே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலை தொடர்பான அச்சங்கள் காரணமாக இந்திய ஐடி நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக 33 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறைந்து வருவது மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சியும் வருமானமும் குறைந்து விடும் என்ற கணிப்புகள் வெளியாகி இருப்பது உள்ளிட்டவை காரணமாக ஐடி நிறுவனங்கள் பங்கு மதிப்பு சரிவை சந்தித்து வருகின்றன.
இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் தான் இருக்கின்றனர். எனவே தான் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் இந்திய ஐடி நிறுவனங்களை பாதிக்கின்றன. இதன்படி இந்தியாவை சேர்ந்த முதல் பத்து ஐடி நிறுவனங்களின் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் தற்போது கரடி சந்தைக்குள் நுழைந்துள்ளன. அதாவது வீழ்ச்சி அடைந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 22 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. குறைந்தபட்சமாக விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16 சதவீதம் வரை வீழ்ந்துள்ளது. இதே போல இன்போசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஒப்பிடும்போது பெரிய அளவு சரிவை கண்டுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸில் ஐடி நிறுவனங்களின் குறியீடு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 19% வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாழக்கிழமை அன்று பங்குச்சந்தை நிலவரத்தின்படி பார்க்கும்போது 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை முக்கியமான ஐடி நிறுவனங்களின் பங்குகள் எவ்வளவு சரிவடைந்துள்ளன என்பதே நமக்கு இந்த நிலவரத்தை உணர்த்தி விடும்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 14.6 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது இதன் ஒரு பங்கு மதிப்பு 3,512 ரூபாயாக இருக்கிறது. அடுத்ததாக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 16 சதவீதம் குறைந்து 1,579 ரூபாயாக இருக்கிறது.
டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 16 சதவீதம் குறைந்து 1434 ரூபாய் என வர்த்தகமாகிறது. ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 சதவீதம் சரிவடைந்து 1,534 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் பங்கு மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை சுமார் 22% குறைந்து 4466 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனும் வர்த்தக போரை தொடங்கியுள்ளார். அதாவது பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ளார். இதனால் சர்வதேச அளவில் ஒரு பொருளாதார ஸ்திரமற்ற தன்மை தொடங்கியுள்ளது. அது தவிர பணவீக்கம் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைய கூடும் என்ற கணிப்புகள் ஆகியவை காரணமாக பெரும்பாலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
ஏனெனில் இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் வருவாய் பெருமளவில் அமெரிக்காவை தான் நம்பி இருக்கிறது. அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாகில் பல்வேறு முதலீட்டாளர்களும் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பங்குகளை வேகமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டிருக்கும் நாஸ்டாக்கின் மதிப்பு 4 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி இந்தியாவில் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்புகளை குறைத்து இருக்கிறது. இதுவும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேற காரணம் ஆகும். மேலும் அமெரிக்க டாலர் வருவாய் வளர்ச்சி 2026 இல் 4.5 சதவீதமாகவும், 2027 ஆம் நிதி ஆண்டில் 6 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது. இது இதற்கு முன்பு வெளியிட்டிருந்த கணிப்புகளை விட இரண்டு சதவீதம் குறைவாகும்.
இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி-யின் ஐடி குறியீடு தற்போது கரடி சந்தைக்குள் நுழைந்துள்ளது. அதாவது 20 சதவீதத்திற்கும் மேல் இது சரிவை கண்டிருக்கிறது. பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவு சரிவை சந்தித்திருப்பதே இதற்கு காரணம்.
இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தான் தங்களுடைய ஐடி சேவைகளை ஏற்றுமதி செய்கின்றன. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் அரசு விசா நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி வருகிறது. இதற்கு மத்தியில் பொருளாதார ரீதியான சவால்களும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்திற்கான தங்களுடைய மதிப்பீட்டை நியூட்ரல் என்ற நிலையிலும் விப்ரோ நிறுவனத்திற்கான தங்களுடைய மதிப்பீட்டை விற்பனை என்ற நிலையிலும் வைத்திருக்கிறது. டெக் மகேந்திராவின் மதிப்பீடும் நியூட்ரல் என்ற நிலையில் வைத்திருக்கிறது.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும் இன்போசிஸ் நிறுவனத்திற்கான பங்கு மதிப்பை முன்பு 2150 என இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில் அதனை தற்போது 1740 என குறைத்திருக்கிறது. டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பையும் இது கணிசமான அளவு குறைத்து இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த முன்னணி 10 ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்புகளில் கடந்த மூன்று மாதங்களில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிவடைந்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய காலம் இது.
More From GoodReturns

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications