இந்தியாவில் தற்போது குயிக் காமர்ஸ் பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற செயலிகளை பயன்படுத்தாத நகரவாசிகளே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு இவை புகழ்பெற்று வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது தான் டன்சோ என்ற செயலி.
ஹைபர் லோக்கல் டெலிவரி பிரிவில் முன்னணி நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் டன்சோ செயலி மற்றும் இணையதளம். ஆனால் பின்னாளில் செப்டோ உள்ளிட்ட செயலிகளின் வருகையால் டன்சோ தளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக டன்சோ மாறிவிட்டது. இதனிடையே டன்சோ நிறுவனத்தின் செயல்பாடுகள் ஜனவரி 13-ஆம் தேதியான திங்கட்கிழமையில் இருந்து முடங்கி விட்டன.
டன்சோ செயலி மற்றும் இணையதளம் ஆகியவை ஆஃப்லைனுக்கு சென்று விட்டன. டன்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த கபீர் பிஸ்வாஸ் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் குயிக் காமர்ஸ் செயலியான மினிட்ஸுக்கு தலைமை பொறுப்பு ஏற்று கபீர் பிஸ்வாஸ் செயல்பட இருக்கிறார்.
கபீர் பிஸ்வாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து டன்சோ செயலி மற்றும் இணையதளம் ஆகியவை ஆஃப் லைனுக்கு சென்று விட்டன. இதன் மூலம் டன்சோ செயலியின் சேவை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாகவே இது நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது , ஊழியர்கள் பலரையும் அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது.
சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களாக ஸ்விக்கியும், ஸோமேட்டோவும் வளர்ந்து வந்த காலத்தில் டன்சோ ஒரு புதுமையான யோசனையுடன் களத்தில் நுழைந்தது. நமக்குத் தேவையான ஒரு பொருளை நாம் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
ஆர்டர் செய்தால் ஒரு குறிப்பிட்ட கடைகளில் இருந்து பொருட்களை நமக்கு வாங்கி வந்து டெலிவரி செய்வார்கள், நாம் பார்சல் அனுப்பலாம் என டன்சோவின் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் சௌகரியமாக கருதினர்.
இதனால் சிறப்பான வளர்ச்சி பெற்ற நிறுவனமாக டன்சோ மாறியது. ஆனால் தற்போது டன்சோவால் வர்த்தகப் போட்டியை தாக்கு பிடிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே டன்சோ நிறுவனம் சரிவிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தது.
எனவே டன்சோ நிறுவனத்தை நிறுவிய பலரும் அதிலிருந்து வெளியேறி வேறு வேறு நிறுவனங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இதனால் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி டன்சோவுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications