பெங்களூர்: இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் அதிகப்படியான முதலீட்டில் இயங்கும் டன்சோ நிறுவனம், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 75% பேரை பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குவிக் காமர்ஸ் துறையில் களமிறங்கிய பல முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய டன்சோ, ஆரம்பத்தில் சிறப்பான வளர்ச்சி, வாடிக்கையாளர்கள், வர்த்தகத்தைப் பெற்றாலும் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிவைச் சந்தித்தது. இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடைல், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 வருடமாக டன்சோ எப்படியாவது சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளையும், கடுமையான முடிவுகளையும் எடுத்தது. ஆனால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த வேளையில், பல கட்ட பணிநீக்கத்திற்குப் பின்பு இந்நிறுவனத்தில் தற்போது 75 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த ஆன்லைன் டெலிவரி ஆப் நிறுவனத்தில் தற்போதைய பணிநீக்கத்தில் 150 பேர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வெறும் 50 ஊழியர்கள் மட்டுமே நிறுவனத்தில் மீதமுள்ளதாகவும், அவர்களும் சப்ளை மற்றும் மார்க்கெட் பிளேஸ் பிரிவுகளில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
டன்சோ நிறுவனத்தின் பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் நிறுவனத்தில் செலவுகளை கட்டுப்படுத்தவும், முன்னாள் மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நிலுவை சம்பளங்களைக் கொடுக்கவும், வியாபாரிகளுக்கான நிலுவை பணம் போன்ற அதிகரித்து வரும் கடன்களைச் சமாளிக்கவும் நிதி ஆதாரத்தைத் திரட்டவும் தான் 75 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உலகளவில் வேலைவாய்ப்பு இழப்புகளைக் கண்காணிக்கும் டிஜிட்டல் தளமான Layoffs.fyi இன் தகவல்படி, இந்த பணிநீக்கம் ஆகஸ்ட் 31, 2024 அன்று செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த பணிநீக்கம் குறித்து டன்சோ நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்த முக்கிய தகவல்கள்.
இந்த செய்தியின் படி, டன்சோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சமீபத்திய பணிநீக்கம் குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இதில், தேவையான நிதி கிடைத்ததும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிலுவை சம்பளங்கள், சர்வீரன்ஸ் தொகை, விடுப்பு பணம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதாக டன்சோ உறுதியளித்துள்ளது.
கான்சியர்ஜ் சேவையாகத் தொடங்கப்பட்ட டன்சோ நிறுவனம் பல மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் $775 மில்லியன் மதிப்புடையதாக இந்த நிறுவனம் உருவெடுத்தது, தற்போது நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஆனால் இதில் பெரும் போராட்டத்தையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications