சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அமெரிக்க நீதிமன்றத்திடம் இருந்து அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு பெற்றுள்ளதாக ஜூன் 14, 2024 அன்று பங்குச்சந்தையில் விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின், டாலஸ் மாவட்ட, வடக்கு மாவட்ட நீதிமன்றத்தால் இந்த அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று TCS பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்பு கம்ப்யூட்டர் சையின்ஸ் கார்ப்ரேஷன் (CSC) என அழைக்கப்பட்டு தற்போது DXC தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது. DXC நிறுவனம் TCS தனது வர்த்தக ரகசியங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய வழக்கைத் தொடர்ந்தது. பெரும் அபராதத்துடன் வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டு உள்ளது. இதில் TCS மொத்தம் $194.2 மில்லியன் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இது இன்றைய ரூபாய் மதிப்பில் 1622.541 கோடி ரூபாயாகும் (1 USD = 83.55 INR).
இதில் 56.151 மில்லியன் டாலர் இழப்பீடாகவும், 112.303 மில்லியன் டாலர் முன்மாதிரியான சேதங்களுக்கான தண்டனைத்தொகை மற்றும் 25.773 மில்லியன் டாலர் தொகையைத் தீர்ப்புக்கு முந்தைய வட்டி எனப் பிரித்து மொத்தம் 194.2 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக விதித்துள்ளது. கூடுதலாக, நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சில தடை உத்தரவுகளையும் பிற நிவாரணங்களையும் விதித்துள்ளது.
இந்த நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தயாராகியிருப்பது மட்டும் அல்லாமல் வலுவான வாதங்கள் முன்வைத்து இந்த அபராதங்களில் இருந்து விடுவிக்க முயல்வதாக TCS தெரிவித்துள்ளது. டாலாஸ் நீதிமன்றம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக ஜூன் 14, 2024 அன்று இந்த அபராத உத்தரவைப் பெற்றது.
இந்த தீர்ப்பு தனது நிதி நிலை மற்றும் செயல்பாடுகளில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று TCS உறுதிப்படுத்தியுள்ளது. சரி எதற்காக இந்த வழக்கு..? டிசிஎஸ் செய்தது என்ன..?
வழக்கின் பின்னணி: 2019 ஆம் ஆண்டில், DXC-ன் முந்தைய நிறுவனமான கம்ப்யூட்டர் சயின்சஸ் கார்ப் (CSC) தனது மென்பொருளைப் பயன்படுத்த டிரான்ஸ்அமெரிக்கா-வின் துணை நிறுவனமான மணி சர்வீசஸ் இன்க் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. இந்த சாப்ட்வேர் பயன்பாட்டில் டிசிஎஸ் முறைகேடு செய்துள்ளதாக வழக்குத் தொடரப்பட்டது.
டிசிஎஸ் 2018 ஆம் ஆண்டில் டிரான்ஸ்அமெரிக்கா நிறுவனத்திடம் இருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இதன் ஒரு பகுதியாக CSC நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தும் வாய்ப்பு டிசிஎஸ்-க்குக் கிடைத்தது.
இப்போது டிரான்ஸ்அமெரிக்கா-வின் 2200 ஊழியர்களின் ஆக்சஸ்-ஐ பயன்படுத்தி CSC-யின் சாப்ட்வேர்-ன் சோர்ஸ் கோடு மற்றும் பிற தனியுரிமை தகவல்களைக் கைப்பற்றி ஒரு புதிய ஆயுள் காப்பீட்டுத் தளத்தை உருவாக்கியது என டிசிஎஸ் மீது DCX குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications