இன்றைய சூழலில் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கையே அதிகம் விரும்புகின்றனர். வீட்டில் இருந்து கொண்டே தங்கள் மொபைலில் உணவு, ஆடைகள், ஏன் தங்கத்தை கூட ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலமாக வாங்குகின்றனர். இப்படி அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் வாயிலாக நடப்பதால், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துள்ளன. அப்படித்தான் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெளியான அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் ரூ. 25,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரை மறைமுக கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் என்ற பேரில் இழப்பதாகத் தெரியவந்துள்ளது. டேட்டம் இன்டெலிஜென்ஸ் என்ற சந்தை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிறுவனம், ஜூன் 9-ஆம் தேதி அன்று "டார்க் பேட்டர்ன்ஸ் இன் இந்தியாஸ் ஆன்லைன் மார்க்கெட் பிளேசஸ்" என்ற அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையில் கிட்டத்தட்ட 304 மில்லியன் ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அதில் 88 சதவீதம் பேர் இந்த டார்க் பேட்டர்ன் என்னும் கூடுதல் கட்டணத்திற்கு இரையாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதா மாதம் 78 ரூபாய் முதல் 87 ரூபாய் வரை கூடுதலாக செலவு செய்து ஷாப்பிங் செய்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் 63 சதவீதம் பேர் ஷாப்பிங் தளங்களில் ஒரு பொருளை வாங்குவதற்கான அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டு, இறுதியாக பை என்று கிளிக் செய்வதற்கு முன்னர் கூடுதல் கட்டணங்களை செலுத்துவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் வேதனை பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 2024-ஆம் ஆண்டில் இந்திய வாடிக்கையாளர்கள் சுமார் 52 சதவீதம் பேர் இந்தக் கூடுதல் கட்டணத்திற்கு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த விகிதம் 63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டேட்டம் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் சுமார் 12 முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை ஆய்வு செய்தது. மேலும் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 50 நகரங்களில் உள்ள 2590 வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பையும் நடத்தியது. அதில் அமேசான் நிறுவனம் மிகவும் நம்பிக்கையான தளமாக மக்கள் மத்தியில் கருதப்பட்டது.
ஆனால் ஃபிளிப்கார்ட் அதற்கு நேர் மாறாக மக்கள் மத்தியில் அவநம்பிக்கை பெற்ற தளமாகக் கருதப்பட்டது. அதேபோல பயண டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் ஆன்லைன் தளமான மேக்மைட்ரிப் மிகவும் பாதுகாப்பான தளமாக கருதப்பட்டது. அதே நேரம் அதிக கட்டணம் கிளியர்ட்ரிப் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறவில்லை.
கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் சுமார் 81% வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தாங்கள் கூடுதல் கட்டணங்களுக்கு ஆட்படுவது தெரிந்தே ஷாப்பிங் செய்வதாக ஒப்புக்கொண்டனர். நியாயமான விலை மற்றும் வெளிப்படை தன்மையான சர்வீஸ் இருந்தால் அதிக விலை கொடுக்கவும் தயார் என 74 சதவீத மக்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications