மத்திய அரசு, வரும் ஏப்ரல் 1 முதல், இந்தியா முழுக்க 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) மற்றும் குறைந்தபட்சம் 95 ஆராய்ச்சி ஆக்டேன் எண் (RON) கொண்ட பெட்ரோல் விற்பனையை கட்டாயமாக்கியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய அரசு தற்போது எண்ணெய் நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி, 20% வரை எத்தனால் கலந்த மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோலை) குறைந்தபட்சம் 95 ஆராய்ச்சி ஆக்டேன் எண் (RON) உடன் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது" எனக் கூறுகிறது.

எனினும், சில சிறப்பு சூழ்நிலைகள், குறிப்பிட்ட பிராந்தியங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து மத்திய அரசு விதிவிலக்குகளை வழங்கலாம். கரும்பு, சோளம், தானியங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் புதுப்பிக்கத்தக்கது, உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது, மேலும் தூய பெட்ரோலை விட சுத்தமாக எரியும் தன்மை கொண்டது.
எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல், உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல் (கரும்பு, சோளம், விவசாய உபரிக்கு தேவை அதிகரிக்கும்) போன்ற காரணங்களுக்காக அரசு எத்தனால் கலப்பை கட்டாயப்படுத்தியுள்ளது.
தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தபடி, 2023-2025 முதல் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்கும். எனவே இதனால் பெரிய சிக்கல்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. பழைய வாகனங்களில் 3-7% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது, மேலும் ரப்பர்/பிளாஸ்டிக் பாகங்கள் தேயக்கூடும். எஞ்சின் சேதத்தைத் தடுக்க குறைந்தபட்சம் 95 RON எண் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி ஆக்டேன் எண் (RON) என்பது எஞ்சினில் 'நாக்' (முன்-எரிதல்) எனப்படும் தடுமாற்றத்தை எரிபொருள் எதிர்த்து நிற்கும் திறனைக் குறிக்கிறது. எரிபொருள் சீரற்ற முறையில் எரியும்போது 'நாக்' ஏற்பட்டு, ஒருவித ஒலி, சக்தி இழப்பு, எஞ்சின் சேதம் ஏற்படலாம். அதிக RON, 'நாக்' எதிர்ப்பை அதிகரிக்கும். எத்தனால் இயல்பாகவே அதிக ஆக்டேன் மதிப்பு (சுமார் 108 RON) கொண்டது. 20% எத்தனால் கலப்பால், பெட்ரோலின் 'நாக்' எதிர்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது.
2022 ஜூன் மாதம், இலக்கிற்கு ஐந்து மாதங்கள் முன்னதாகவே 10% எத்தனால் கலப்பை இந்தியா அடைந்தது, இது அரசுக்கு ஊக்கமளித்தது. இதன் காரணமாக, 20% கலப்புக்கான இலக்கை 2030இல் இருந்து 2025-26ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு முன்னோக்கி நகர்த்தியது. தற்போது நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் 'E20’ அல்லது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2014-15ஆம் ஆண்டு முதல், இந்த பெட்ரோல் மாற்றீட்டின் மூலம் இந்தியா ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணியைச் சேமித்துள்ளது.


Click it and Unblock the Notifications