ஈரான் போர் தீவிரமடைந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் 3 மாதங்களுக்கும் மேலாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது. இதனால் இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து வாங்கியது. இந்த கூடுதல் விலை நுகர்வோரான நம் மீது பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் சுமத்தப்பட்டது.
கச்சா எண்ணெய்க்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்பதால் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது வழக்கமான பெட்ரோலை விட விலை குறைவு, மேலும் எத்தனால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் E20 பெட்ரோலை (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) வாகனங்களில் பயன்படுத்துவதால் வாகனங்களுக்கான காப்பீடு செல்லாது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வாகன ஓட்டிகளை குழப்பமடைய வைத்தது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாகும். எனவே, இதனால் காப்பீடு பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
பெட்ரோலில் கரும்புச் சாற்றை நேரடியாகக் கலக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது. கரும்புச் சாறு, மோலாசஸ், மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களில் இருந்து தொழிற்சாலைகளில் பல்வேறு வேதியியல் செயல்முறைகள் மூலமே எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் எத்தனால் தரப் பரிசோதனைக்குப் பிறகே பெட்ரோலில் கலக்கப்படுகிறது என அரசு கூறுகிறது.
வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை ஊற்றினால் எறும்புகள் மொய்க்கும் என்று ஒரு வைரல் வீடியோ பரவி வருகிறது இதுவும் உண்மை அல்ல என பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. எரிபொருள் தரம் கொண்ட எத்தனாலில் சர்க்கரைச் சத்துக்கள் இருக்காது. மேலும், இதில் சேர்க்கப்படும் 'டிநேச்சுரண்ட்ஸ்' பூச்சிகளை விரட்டும் தன்மையுடையவை. எனவே, எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் எறும்புகள் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கம் தந்துள்ளது.
மேலும் E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்தின் என்ஜின் பழுதடையும் என பரப்பப்படும் தகவல்களிலும் உண்மையில்லை, பெட்ரோலிய அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என கூறுகிறது. E20 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எத்தனால் கலப்பால் என்ஜின் பழுதடைந்ததாகப் பெரிய அளவிலான புகார்கள் எதுவும் வரவில்லை. எரிபொருள் தொட்டிக்குள் தண்ணீர் புகுவதுதான் வாகனத்திற்கு ஆபத்தானதே தவிர, எத்தனால் கலப்பு அல்ல என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, சுமார் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகிறது என அரசு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications

