EaseMyTrip பிராண்டின் தாய் நிறுவனமான ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓவான நிஷாந்த் பிட்டி, 2025 ஜனவரி 1 முதல் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். பங்குச்சந்தையில் ஒப்பன் மார்க்கெட் பரிவர்த்தனை மூலம் இந்நிறுவனத்தில் தனது 1.4% பங்கை விற்றார். இதை தொடர்ந்து சிஇஓ பதவியில் இருந்து விலகுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிஷாந்த் பிட்டி சுமார் 4.99 கோடி பங்குகளை சராசரியாக ரூ.15.68 என்ற விலையில் விற்றுள்ளார், இதன் மொத்த பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.78.32 கோடி அளவிலான நிதியை திரட்டியுள்ளார். இந்த பங்குகளை விற்றதைத் தொடர்ந்து, ஈஸி ட்ரிப் பிளானர்ஸில் அவரது பங்குகளின் அளவு 14.21% லிருந்து 12.8% ஆக குறைந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனத்தின் ப்ரோமோட்டர் ஹோல்டிங் பங்கு இருப்பு 50.38% லிருந்து 48.97% ஆக குறைந்துள்ளது.

இதேபோல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பரிலும் நிஷாந்த் பிட்டி சுமார் ரூ.920 கோடி மதிப்பில் தனது 14% பங்குகளை விற்றார். தற்போது கூடுதலாக 4.99 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளார். நிஷாந்த் பிட்டி பதவி விலகியைதை தொடர்ந்து ஈஸி ட்ரிப் பிளானர்ஸின் புதிய சிஇஓவாக ரிக்காந்த் பிட்டி உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈஸி ட்ரிப் பிளானர்ஸின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவை கண்டன, இன்றைய வர்த்தகத்தில் 0.50 சதவீதம் சரிந்து ரூ.15.79 ரூபாய்க்கு தற்போது வர்த்தகமாகி வருகிறது.
மேலும் நிஷாந்த் பிட்டி விற்பனை செய்த பங்குகளில் 2.40 கோடி பங்குகளை சராசரியாக ரூ.15.86 என்ற விலைக்கு அருணாபேன் சஞ்சய்குமார் பாத்யா வாங்கினார். இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.38.06 கோடியாகும். மீதமுள்ள பங்குகளை வாங்கியது யார் என்ற விபரம் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications