இன்னும் சில தினங்களில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நடப்பு ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையானது நாளை தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.
கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 11% வளர்ச்சி காணலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை தாக்கம் செய்யப்படவிருக்கும் ஆய்வறிக்கையில் இது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) என்றால் என்ன? இது எதற்காக தாக்கல் செய்யப்படுகின்றது. இதனை யார் தாக்கல் செய்வார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கை என்பது, இந்தியாவின் நிதித்துறையில் உள்ள தலைமைப் பொருளாதார ஆலோசகரின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்படும் ஆண்டறிக்கையாகும். இந்த அறிக்கையானது அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு, ஒருநாள் முன்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு ஆவணமாகும்.
ஏன் பட்ஜெட்டுக்கு முன்பு?
பட்ஜெட்டுக்கு முந்தைய கவனம் பெரும்பாலும் நிதி பற்றாக்குறை மீது இருக்கும் என்பதால், எல்லா பட்ஜெட்களுக்கும் முன்பு பொருளாதார ஆய்வறிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரத்தின் நடப்பு நிலை, நெருக்கடியான நிலைகளில் ஏற்பட்ட நேரங்களில் அரசின் நிலைப்பாடு குறித்த புரிதலையும் பெற முடியும். இதன் மூலம் பட்ஜெட்டினை எளிதாக புரிந்து கொள்ள பயன்படுகின்றது. மெலும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
முக்கிய அம்சம்
நாட்டின் வருவாய், தொழிற்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, பணவீக்கம், வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், விலைவாசி, விவசாய உற்பத்தி, உள்ளிட்ட அம்சங்களின் புள்ளியியல் விவரங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும். இது தவிர அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற தகவல்களும் இடம்பெறும்.
முதல் ஆய்வறிக்கை
முதல் பொருளாதார ஆய்வறிக்கையானது 1950 - 51ம் ஆண்டிற்கான அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இது 1964 வரையில் மத்திய பட்ஜெட் உடனேயே தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
யார் தாக்கல்?
பொதுவாக இந்த பொருளாதார ஆய்வறிக்கையினை மத்திய தலைமை பொருளாதார ஆலோசகரே தயாரிப்பார். ஆனால் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் இவர் நியமிக்கப்பட்டு சில தினங்களே ஆகியுள்ள நிலையில், இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.


Click it and Unblock the Notifications