மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை, தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை உலகளாவிய நிதி மற்றும் புவிசார் அபாயங்களின் அறிகுறியாக சுட்டிக்காட்டியுள்ளது. உலக வர்த்தகம் இப்போது பலதரப்பு வளர்ச்சிக்கு பதிலாக பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய அரசு எச்சரிக்கிறது.
2025ஆம் ஆண்டில் தங்க விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க டாலர் பலவீனமடைந்தது, உண்மையான வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைவது, புவிசார் மற்றும் நிதி அபாயங்கள் அதிகரித்தது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் என பொருளாதார ஆய்வறிக்கையில் பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு.

தங்கம் தான் உலகின் பொருளாதார அபாயத்தை அளவிடும் அளவுகோலாக (Barometer) செயல்படுகிறது எனவும், இதனாலேயே தங்கம் மற்றும் வெள்ளியை கோர் பணவீக்க கணக்கீட்டில் சேர்க்கவில்லை பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணவீக்கம் பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும், ஆனால் தங்கம், வெள்ளி விலையோ உள்நாட்டு தேவை-விநியோகத்தால் அல்லாமல், உலக நிதி நிலவரங்களால் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. இதனால் core inflation கணக்கீட்டில் தங்கம், வெள்ளியை சேர்க்கப்படவில்லை.
கோர் பணவீக்கம் (தங்கம், வெள்ளி தவிர்த்து) குறைவாக இருப்பது உள்நாட்டு பொருளாதாரத்தில் சப்ளை பக்கம் வலுப்பெற்று வருவதை காட்டுகிறது. இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி விலை உயர்வு இரு வகையான சிக்னலை தருகிறது என்றால் மிகையில்லை.
நல்ல செய்தி: தங்கம், வெள்ளி தவிர்த்த பணவீக்கம் குறைவாக உள்ளது. உள்நாட்டு விநியோக அமைப்பு வலுப்பெற்று வருகிறது.
ஆபத்தான செய்தி: உலக வர்த்தகம் இப்போது அரசியல் அடிப்படையில் நடக்கிறது. வரி, தடைகள், கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. வர்த்தகம் எதிர்பாராத விதத்தில் மாறக்கூடும் நிலைமை தொடர்ந்து இருக்கிறது.
இந்தியா சற்று பாதுகாப்பாக உள்ளது. ஐடி, சேவை துறை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு தொடர்ந்து அனுப்பும் பணம் ஆகியவை இந்திய சந்தைக்கு பலமாக உள்ளது. ஆனால் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வலுவான உற்பத்தி ஏற்றுமதி அவசியம். ஆய்வு, உலக அபாயங்கள் அதிகரித்தால் நாணய மதிப்பு ஏற்ற இறக்கம், மூலதன ஓட்டம் திடீர் மாற்றம், இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு அழுத்தம் ஏற்படும் என்று எச்சரிக்கிறது.
சாதாரண மக்களுக்கு இது என்ன பொருள்? உலகில் அபாயங்கள் அதிகரிக்கும்போது தங்கம், வெள்ளி விலை உயரும். இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது. ஆனால் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்தால் பொருட்கள் விலை மாறலாம்.
இந்த நிலையை மாற்ற மத்திய அரசு உற்பத்தி துறையை வலுப்படுத்த வேண்டும். இதேபோல் உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வை அதிகரிக்க கொள்கை அளவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் உறுதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications