இந்திய மக்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்ஜெட் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், இன்றைய முக்கிய நிகழ்வாக
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் அவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மூலம், பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது.

கடந்த நிதியாண்டில் (FY23) பதிவான பொருளாதார வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சர்வதேச சவால்களைக் கடந்து 2023-24 (FY24) நிதியாண்டில் 8.2 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. இது 2025 ஆம் நிதியாண்டில் 6.5 - 7 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது.
2023-24 (FY24) நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் மூன்றில் 8 சதவீதத்திற்கும் அதிகமான GDP வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது மிகவும் பாராட்டத்தக்கச் சாதனை என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நிலைத்தன்மையை உருவாக்க அரசு கவனம் செலுத்தியதன் மூலம் சர்வதேச சவால்களின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மூலதன வளர்ச்சியை அதிகரிப்பதற்கு அரசின் உள்கட்டமைப்பு (capex) செலவீடுகள் மற்றும் தனியார்த் துறை முதலீடுகளில் பதிவான நிலையான வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளன. 2023-24ஆம் ஆண்டில் உண்மையான வளர்ச்சி அடிப்படையில், நாட்டின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation) 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகளவில் பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால் வெளிப்புற சமநிலை (external balance) பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் வலுவான சேவைத் துறை ஏற்றுமதி இருந்த காரணத்தால் இதில் பெரும் சரிவு தடுக்கப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக, 2023 நிதியாண்டில் 2.0 சதவீதமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவீடு 2024 நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாக குறைந்துள்ளது, இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் நிலையான முறையில் மீண்டு வந்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டின் ரியல் ஜிடிபி அளவீடு, 2020ஆம் நிதியாண்டில் இருந்த நிலையை விட 20 சதவீதம் அதிகமாக இருந்தது, இது உலகில் சில முக்கியப் பொருளாதார நாடுகளால் மட்டுமே எட்டிய சாதனை என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications