டெல்லி : இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அடுத்து வரும் டிசம்பர் மாத கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கும் நிலையில், இதை மேம்படுத்த வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் 5 முறை ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 5 முறை வட்டி விகிதத்தினை 135 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ள நிலையில், இந்த முறையும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி முடிவுகளால் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க இது பெரிதும் உதவும் என்றும் கருதப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் ஏற்கனவே 5 முறை வட்டி குறைப்பு செய்து, 5.15 சதவிகிதமாக உள்ளது. இது மேலும் குறைக்கப்படும் போது இன்னும் வட்டி விகிதங்கள் குறையும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி குறைப்பு மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்றும், இதனால் ஜிடிபியையும் இது பெருக்க உதவும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இது செப்டம்பர் காலாண்டில் 4.7 சதவிகிதம் தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா ரேட்டிங்ஸ் உள்ளிட்ட பல முக்கிய மதிப்பீட்டு நிறுவனங்கள் இவ்வாறே கணித்துள்ளது.
இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் 25 அடிப்படை புள்ளிகளை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 4.90 சதவிகிதமாக வட்டி விகிதம் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Reuters அளித்துள்ள அறிக்கையில் அடுத்தடுத்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கி மேலும் வட்டியை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அடுத்த 15 மாதங்களில் வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பலர் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தமானது அடுத்த ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுள்ளது.


Click it and Unblock the Notifications