அனில் அம்பானியின் ரிலையன்ஸ் வர்த்தக குழுமத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அனில் அம்பானியின் பாலி ஹில் இல்லம் உட்பட ரூ.3,000 கோடி மதிப்பிலான 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கியுள்ளது.
அதன்படி டெல்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள அலுவலக வளாகங்கள், குடியிருப்பு அலகுகள் மற்றும் நிலப் பகுதிகள் உட்பட மொத்தம் ரூ.3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

யெஸ் வங்கி கடன் மோசடி வழக்கு : ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) ஆகிய நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை சட்டவிரோதமாக திசை திருப்பி, பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் யெஸ் வங்கி இந்த இரண்டு நிறுவனங்களிலும் ரூ.5,010 கோடி முதலீடு செய்திருந்தது.
யெஸ் வங்கிக்கு ரூ.2,700 கோடி இழப்பு : ஆனால், இந்தக் கடன்கள் திரும்பி வராததால், யெஸ் வங்கிக்கு சுமார் ரூ.2,700 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை (CBI) தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மேலும் இது, யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கும், அனில் அம்பானிக்கும் இடையே நடந்த கிரிமினல் சதி என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து நேரடியாக கடன் வழங்க முடியாததால், யெஸ் வங்கியின் முதலீடுகள் வழியாக மறைமுகமாக ரிலையன்ஸ் குழுமத்தை அடைந்தது தெரிய வந்துள்ளது. குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விதிமுறைகளில் பெரிய அளவில் பிழைகள் இருந்ததையும் அமலாக்கத்துறை கண்டறிந்தது.
ரூ.13,600 கோடி மோசடி குறித்து விசாரணை : பல சந்தர்ப்பங்களில், கடன் விண்ணப்பம், ஒப்புதல் மற்றும் ஒப்பந்தம் ஆகியவை ஒரே நாளில் முடிக்கப்பட்டுள்ளன. சில சமயம், கடன் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பிணைகள் போதுமானதாகவோ அல்லது பதிவு செய்யப்படாமலோ இருந்தன. இவை அனைத்தும் வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்த ரூ.13,600 கோடி கடன் மோசடி குறித்தும் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, ரூ.13,600 கோடி கடனை, வெளிப்படையான வணிகத்திற்கு பயன்படுத்தாமல், அதில் பெரும்பாலான தொகையை (ரூ.12,600 கோடி) சொந்த குழுமத்தின் மற்ற நிறுவனங்களுக்கு முறையற்ற வழிகளில் திருப்பிவிட்டு மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தற்போது அதுதொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications