மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்க துறை பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) விதிகளின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் செயல் தலைவர் பவன் முன்ஜால்-க்கு டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் அமைந்துள்ள வீடு, அலுவலகம் எனப் பல இடங்களில் ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தி தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் பவன் முன்ஜால்-க்கு சொந்தமான டெல்லியில் உள்ள 3 அசையா சொத்துக்களை PMLA, 2002 இன் விதிகளின் கீழ் அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த 3 சொத்துக்களின் மதிப்புத் தோராயமாக 24.95 கோடி ரூபாயாக உள்ளது.

பணமோசடி விசாரணை தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாகத் தலைவர் பவன் முன்ஜாலுக்குச் சொந்தமான 3 வீடுகள் உட்படச் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இதுவரையில் அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளதாகத் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பவன் முன்ஜால் மற்றும் நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறையினர் முக்கியமான சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித் துறையின் இந்தச் சோதனைக்குப் பின்பு CBDT அமைப்பு ஹீரோ மோட்டார்கார்ப் பெயரை வெளியிடாமல் சமீபத்திய சோதனையில் 800 கோடி ரூபாய் அளவிலான முறையற்ற வர்த்தகச் செலவுகள் செய்யப்பட்டு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம் எனத் தெரிவித்தது. இது அப்போதே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது மறக்க முடியாது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் கார்ப்பரேட் நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராகக் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் குற்றச்சாட்டு ஹீரோ மோட்டோகார்ப் அதிகப்படியான ஷெல் நிறுவனங்களை இயக்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தான். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் தான் வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் மத்தியிலான உறவு குறித்து ஆய்வுகள் தொடர்ந்தது.
இதன் பின்பு தான் ஆகஸ்ட் மாதம் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாகப் பவன் முன்ஜால் மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய பலரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 24 கோடி ரூபாய் மதிப்பிலான 3 வீடுகள் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இதர சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications