இந்திய எட்டெக் துறை நாளுக்கு நாள் மோசமான நிலைக்குச் சென்று வருகிறது, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் பைஜூஸ் திவாலாகாமல் தப்பிக்குமா என்ற கேள்வி தினமும் முதலீட்டாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் வேளையில், பல எட்டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வந்தது.
கடந்த சில மாதங்களாக பைஜூஸ் தவிர வேறு எந்த எட்டெக் நிறுவனத்திலும் பணிநீக்கம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பிரபல Scaler நிறுவனத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. துறை வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்தும் டிஜிட்டல் கல்வி சேவை அளித்து வரும் எட்டெக் நிறுவனமான ஸ்கேலர் நிறுவனத்தில் 150 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பணிநீக்கம் மூலம், Scaler நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெளியேற்றப்படலாம் என தெரிகிறது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்கேலர் நிறுவனத்தில் சுமார் 900 ஊழியர்கள் உள்ளனர். இதில் 150 பேர் தற்போதைய பணிநீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர், இதன் மூலம் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 17% குறைக்கப்பட உள்ளது.
பகுதி நேர பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 1400 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணியாளர் நீக்கம் குறித்து ஸ்கேலர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான தேவை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்கேலர் நிறுவனத்தின் செலவுகள் சுமார் 2.7 மடங்கு அதிகரித்து 654.6 கோடி ரூபாயாக உள்ளது. இதில் ஊழியர்கள் சம்பளம் மட்டுமே 322.07 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவித்திருந்தது. இக்காலகட்டத்தில் ஸ்கேலர் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் 4.8 மடங்கு அதிகரித்து 316.7 கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications