தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை வெளியானதையடுத்து, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல்
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
அதேபோல் கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரிஆகிய இடங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும்.
இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பண விநியோகத்தைத் தடுக்க கண்காணிப்பு
தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, பணம் அல்லது பொருட்கள் மூலம் வாக்காளர்களை கவரும் பணிகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பை தொடங்கியுள்ளது.
இதற்காக பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன.
ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற உரிய ஆவணங்களை காட்ட வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.
ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை பணம் இருந்தால், மாவட்ட அளவிலான குழு ஆவணங்களை சரிபார்த்து பின்னர் விடுவிக்கும். ஆனால் ரூ.10 லட்சத்தை விட அதிகமாக இருந்தால் அந்த விவரம் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு மேற்படி விசாரணை நடத்தப்படும்.
பணம் - கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
பணம் எடுத்துச் செல்லும் போது அது யாருக்கு செல்கிறதோ, அவர்களின் அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் அனுப்பப்பட வேண்டும். மேலும் பணம் கொண்டு செல்லும் இடம் மற்றும் அதற்கான முகவரி தெளிவாக ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும்.
பணம் எடுத்துச் செல்லும் நடவடிக்கை அதற்கான ஆவணங்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் சரியாக இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் திருப்பி வழங்கப்படும்.
அரசின் விளம்பரங்களுக்கு தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், அரசின் செலவில் செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை.
அதேபோல் அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். இதன் அடிப்படையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
புதிய நலத்திட்டங்களுக்கு தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில் அரசு புதிய நலத்திட்டங்கள், நிதி உதவிகள் அல்லது சலுகைகள் அறிவிக்க முடியாது. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைவர்களின் படங்கள் அகற்றம்
இந்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட்டு அல்லது அகற்றப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications