தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டன.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை அடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் கிட்டத்தட்ட 97.30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் , ஒரே நபரின் பெயர் இரண்டு இடங்களில் இடம்பெற்று இருந்தது, முறையான முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்காது என பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு 97.30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.

இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் முறையான ஆவணங்கள் அளித்தும் தங்களுடைய பெயர்களை சேர்க்கவில்லை என ஏராளமானவர்கள் புகார் கூறினர். இதனை அடுத்து தேர்தல் ஆணையம் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை புதிதாக சேர்க்கவும், ஏற்கனவே இருக்கக்கூடிய தங்களுடைய வாக்காளர் விவரங்களில் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கும் வாய்ப்பினை வழங்கியது.
தமிழ்நாட்டின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இதற்காகவே பிரத்தியேகமாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தன. மொத்தம் 97.30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன, ஆனால் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13.03 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். இது தவிர பெயரை நீக்கக்கோரி 35,646 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் நபர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்யாத நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இருக்கும் தங்களுடைய விவரங்களை மாற்ற வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு பிப்ரவரி 17ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் எல்லாம் இடம் பெற்றிருக்கிறதோ அவர்களால் மட்டுமே எதிர் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே சட்டமன்ற தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என எண்ணுபவர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications