இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான ஓலா அக்டோபர் மாதம் விற்பனையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய நிலையில், நவம்பர் மாதத்தில் 33% சரிவை கண்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் ஓலா-வுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாகன் போர்டல் தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் 27,746 வாகனங்களை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 40,000க்கும் அதிகமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது பெரும் சரிவாகும். இதன் காரணமாக, ஓலாவின் சந்தைப் பங்கு அக்டோபர் மாதத்தின் 30%ல் இருந்து நவம்பர் மாதத்தில் 24% ஆக குறைந்துள்ளது.

ஆனாலும் ஓலா எலக்ட்ரிக் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிராண்டாக உள்ளது. இருப்பினும், அதிகரிக்கும் போட்டி மற்றும் தயாரிப்பு தரம், விற்பனைக்கு பிந்தைய சேவை குறித்த பிரச்சனைகள் காரணமாக ஓலா கடந்த சில மாதங்களில் ஓலாவின் விற்பனை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் நாட்டின் மற்ற முக்கிய நிறுவனங்களும் நவம்பர் மாதத்தில் சரிவை கண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் மாதாந்திர அளவில் 13% சரிவுடன் 26,036 வாகனங்களை பதிவு செய்தது. இருப்பினும், டிவிஎஸ்-ன் சந்தைப் பங்கு நவம்பர் மாதத்தில் 21.5%ல் இருந்து 23% ஆக அதிகரித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நவம்பர் மாதத்தில் 24,978 எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை பதிவு செய்தது. இது மாதாந்திர அடிப்படையில் சுமார் 12% சரிவு ஆகும். நவம்பர் மாதத்தில் பஜாஜ்-ன் சந்தைப் பங்கு 20%ல் இருந்து 22% ஆக உயர்ந்தது.
அதேபோல், ஏதர் எனெர்ஜியும் 24% சரிவை கண்டது. நவம்பர் மாதத்தில் 12,217 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் மாதத்தில் 16,148 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
மொத்தமாக பார்க்கும் போது, எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை நவம்பர் மாதத்தில் மாதாந்திர அடிப்படைடில் 18% க்கும் அதிகமாக சரிவு கண்டது. இந்த மாதம் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.14 லட்சம் யூனிட்களாக குறைந்தது. ஆனால் வருடாந்திர அடிப்படையில் 23.5% அதிகமாகும்.


Click it and Unblock the Notifications