இந்திய ஆட்டோமொபைல் துறை மொத்தமாக மாறி வரும் வேளையில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியதால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளது. ஆனால் பேட்டரிகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் பெரும்பாலானவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) ஏற்பாடு செய்த 50வது தேசிய மேலாண்மை மாநாட்டில் பேசிய மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவரான ஆர்.சி. பார்கவா, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். இதில் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவின் மொத்த மின்சார பயன்பாட்டில் குறைந்தது 50% புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் தயாரிக்கம் வரையில் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்காது என்று பார்கவா தெரிவித்தார்.
எனவே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிலாக ஹைப்ரிட் எரிபொருள் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களையும், பசுமை எரிபொருட்களான எத்தனால் மற்றும் ஹைட்ரஜென் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம் என பேசினார்.
ஆர்.சி. பார்கவா இதற்கு முக்கிய காரணமாக கூறுவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 75 சதவீதம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு எப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கார்பன் ஃபூட்பிரின்ட்-ஐ குறைக்க முடியும். நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பயன்பாட்டை குறைக்கும் வரையில் இது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
இந்தியாவில் மின்சார ஆதாரங்களை முழுமையாக மாற்றும் வரையில், அதாவது அதிகப்படியான மின்சாரத்தை ரினிவபிள் எனர்ஜி மூலம் தயாரிப்பது வரையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஹைப்ரிட் வாகனங்கள் தான் சரியான தேர்வாக இருக்கும் என தெரிவித்தார்.
சொல்லப்போனால் டாடா, மஹிந்திரா, ஹிண்டாய் ஆகியவை 100 சதவீதம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கியிருக்கும் வேளையில் மாருதி சிசூகி, டோயோட்டா, ஹோண்டா ஆகியவை இந்தியாவில் இன்னும் முழு எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவில்லை. மேலும் மாருதி சிசூகி, டோயோட்டா சமீபத்தில் இணைந்து ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது.
இதேபோல் மாருதி சுசூகி எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பு விலை இந்தியாவின் மாஸ் மார்கெக்ட்டிங் சந்தைக்கு சரியானதாக இல்லை என நம்புகிறது. இதனாலேயே முழு எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் பெரும் தயக்கத்தை காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications